மதுரை / திருப்புவனம்: சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது அவர்கள், “மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கோயில் காவலரான அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அவர் உயிரிழந்தார்.
இதுபோன்ற சட்டவிரோத காவல் மரணங்களை ஏற்க முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றனர். பின்னர் நீதிபதிகள், “கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக போலீஸார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம். அவ்வாறு இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தால், விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.
இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
குற்றவியல் நடுவர் விசாரணை: இதற்கிடையில், அஜித்குமாரை போலீஸார் தாக்கியதாகக் கூறப்பட்ட மடப்புரம் கோயில் பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் நேற்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பெண்கள், முறையாக விசாரணை நடத்த வேண்டுமென அவரிடம் முறையிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி நேற்று ஆலோசனை நடத்தினர். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரேதப் பரிசோதனை அறிக்கை, குற்றவியல் நடுவர் விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சிபிஐ விசாரிக்க வேண்டும்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 6 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தது போதாது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.
அஜித்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்காதது ஏன்? சாத்தான்குளத்தில் இருவரை போலீஸார் அடித்துக் கொன்றபோது கனிமொழி, மு.க.ஸ்டாலின் அங்கு சென்றனர். அஜித்குமார் இந்து என்பதால் இங்கு வரவில்லையா? அதனால்தான் நிவாரணம் தரவில்லையா?
சிபிஐ விசாரணை நடத்தினால்தான் நியாயம் கிடைக்கும். மடியில் கனம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல, அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.