வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர் மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த இளைஞர் இவர்களிடமிருந்து தப்பிக்க நேரடியாக வேலூர் கோட்டையின் நீர் தேங்கும் அகழியில் குதித்துள்ளார். முழங்கால் வரைக்கும் தண்ணீர் இருக்கும் ஆழம் குறைவான பகுதியில் குதித்துள்ளார் அந்த இளைஞர்.

உடனடியாக பொது மக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை மீட்க, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வேலூர் கோட்டையின் அகழியில் ஆழமே இல்லாத பகுதியில் குத்தித்துவிட்டு தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட, தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் கயிறு போட்டு அவரை பிடித்தனர். விசாரணையில், கோழி என்கிற கோபி வேலூர், விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் கோட்டை அகழியில் பிடிபட்ட இளைஞரை, வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கைது செய்தனர். வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

வேலூர் கோட்டையின் உள்ளே நடக்கும் திருட்டு சம்பவங்கள் குறித்து பொது மக்களிடம் கேட்டபோது, “வேலூர் கோட்டையின் உள்ளே சுற்றலா பயணிகளிடம் திருட்டு, வழிப்பறி என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க 6 மாதங்களுக்கு முன்பு வரை கோட்டையின் உள்ளேயே காவல் உதவி மையம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது காவல் உதவி மையம் செயல்பாட்டில் இல்லை. எனவே காவல் உதவி மையத்தை மீண்டும் வேலூர் கோட்டையில் உள்ளே செயல்படுத்தினால் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்” என்றனர்.
நடவடிக்கை எடுப்பார்களா காவல்துறையினர்?