புதுடெல்லி: வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய திட்டங்கள் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியது: “வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக பணியில் சேர உள்ளவர்களுக்கும், அவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடியதாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு 2024-25 மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி, முதல் முறையாக பணிக்கு சேருபவர்களை மையமாகக் கொண்டது. இரண்டாவது பகுதி, உரிமையாளர்களை மையமாகக் கொண்டது:
முதல் முறை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த முதல் முறை பணியாளர்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அரசு வழங்கும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள்.
உரிமையாளர்களுக்கு ஆதரவு: அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களைக் கொண்ட நிறுவன உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படும். பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பணியாளருக்கும் மாதத்திற்கு ரூ.3000 வரை உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேநேரத்தில், உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத் தொகை 3-வது மற்றும் 4-வது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும்.
4 வழிச்சாலை திட்டத்துக்கு ஒப்புதல்: தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான இருவழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-87 இனி நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடம் 2 முக்கிய ரயில் நிலையங்கள் (மதுரை மற்றும் ராமேஸ்வரம்), 1 விமான நிலையம் (மதுரை) மற்றும் 2 சிறிய துறைமுகங்கள் (பாம்பன் மற்றும் ராமேஸ்வரம்) ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இந்தப் பகுதிகள் முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கும்.
பரமக்குடி – ராமநாதபுரம் இடையே அமைக்கப்பட உள்ள இந்த 4 வழிச்சாலைத் திட்டம் நிறைவடைந்தவுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன் வழிபாட்டு மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பையும் வலுப்படுத்த உதவிடும். ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவிடும். மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் வகை செய்யும். இத்திட்டம் 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாட்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாட்களையும் உருவாக்கும். மேலும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.