`துள்ளாத மனமும் துள்ளும்’, `பூவெல்லாம் உன் வாசம்’, `மனம் கொத்திப்பறவை’, `தேசிங்கு ராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியிருக்கிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, `விஜய் டிவி’ புகழ், ரோபோ சங்கர், ரவி மரியா, `லொள்ளுசபா’ சுவாமி நாதன், சிங்கம் புலி எனப் பெரும் காமெடி நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.

ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய இசையமைப்பாளர் வித்யாசாகர்,“பூவெல்லாம் உன்வாசம் படத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து தேசிங்கு ராஜா2-வில் நானும் எழிலும் இணைந்திருக்கிறோம். பூவெல்லாம் உன்வாசம் படத்துக்கும் இந்தப் படத்துக்குமான எழிலிடம் பெரிய வித்தியாசமும் மாற்றமும் தெரிகிறது. விமலுடனும் என்னுடைய இரண்டாவது படம்.
டிஜிட்டல் உலகில் இசை எளிது எனக் கூறுகிறார்கள். உண்மைதான். ஆனால், அது கற்பனைத் திறன், உள்ளிருக்கும் படைப்பாற்றல் மிகவும் முக்கியம். இசையைக் கேட்பதற்கும், அதை உருவாக்குவதற்கும் சவுண்ட் குவாலிட்டி வேண்டுமானால் டிஜிட்டல் உலகில் சிறப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன். என் மீதும், என் இசை மீதும் மாறாத அன்பு வைத்திருக்கும் மக்களுக்கும், இந்த ஜெனரேஷன் மக்கள் கூட என்னுடைய பாடலைக் கேட்டு பாராட்டும் படியான காலம் கடந்து நிற்கும் பாடலைத் தந்த ஆண்டவனுக்கும் நன்றி. படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய விஜய் டிவி புகழ், “தேசிங்கு ராஜா 2 வில் எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் எழில் சார். குக் வித் கோமாளியில் இருக்கும் காமெடி சினிமாவில் இல்லையே… சினிமாவில் எப்போது காமெடி செய்வீர்கள் எனப் பலர் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படம் அதைச் சரி செய்யும் என நினைக்கிறேன். சிரித்துக்கொண்டே இருக்கும் இயக்குநர் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் எனக்கு லேடி கெட்டப். சினிமா துறையில் சசிகுமார் சார், விமல் சார் என இரண்டு நடிகர்களிடம் எந்த ஈகோவும் இருக்காது. எப்போது வேண்டுமானாலும் அவர்களிடம் பேசுவோம். ஒரு படம் எடுப்பது என்றால் மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் சோசியல் மீடியாவில், யுடியூபில் ஒரே வார்த்தையில் படம் நன்றாக இல்லை எனக் கூறிவிடுகிறார்கள். மக்கள் சென்று பார்த்துவிட்டு படம் குறித்துப் பேசட்டும். வருமானம் வருகிறது என்பதற்காக படம் நன்றாக இல்லை எனக் கூறாதீர்கள். படத்தை வெற்றிப்பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”