தனுஷுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ்,தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் ஓடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ‘குபேரா’ திரைக்கு வந்தது. பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. இந்தப் படம் இந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளியாகும் என்கிறார்கள். தமிழில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படம், அக்டோபர் முதல் தேதியன்று வெளியாகிறது. ஆக, இந்தாண்டில் தனுஷுக்கு மூன்று படங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

இந்தியில் ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ திரைக்கு வந்து 12வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘அட்ராங்கி ரே’வை தொடர்ந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் கமிட் ஆனார் தனுஷ். கிர்த்தி சனூன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு டெல்லியிலும், மும்பையிலும் நடந்திருக்கிறது. ‘தேரே இஷ்க் மெய்ன்’ படப்பிடிப்பில் தனுஷ், ஆனந்த் எல்.ராயின் நட்பு ரொம்பவே நெருக்கமான நட்பாக மாறியிருக்கிறது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தை இயக்கலாம் என்கிறார்கள்.
இதற்கிடையே தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ அக்டோபர் ஒன்று திரைக்கு வருகிறது. அதன் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் பெரும்பகுதி நடந்தது. அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியிலும் கிளைமாக்ஸ் போர்ஷன் பாங்காக்கிலும் நடந்திருக்கிறது. அதற்காக தனுஷுடன் சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே பலரும் பாங்காக் பறந்து வந்தனர். அதன் படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்து விட்டாலும் படத்தின் இயக்குநரும் தனுஷ் என்பதால், அதன் போஸ்ட் புரொடக்ஷனில் முழு வீச்சாக அவர் இறங்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது இந்தி படத்தை முடித்துக் கொடுத்திருப்பதால் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு இடையே சில வாரங்கள் அவருக்கு நேரம் கிடைத்திருக்கிறது. ஆகையால், ‘இட்லி கடை’யின் வேலைகளில் இறங்குகிறார். சில நாட்கள் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் ராஜ்கிரண் தொடர்பான காட்சிகளை படமாக்க உள்ளனர். அதற்கான லொகேஷனை இப்போது பார்த்து வருவதாகச் சொல்கிறார்கள்.

டப்பிங் வேலைகளையும் இந்த இடைவெளிகளில் முடித்துவிடுவார் என்கிறார்கள். ஆக, தமிழில் ‘இட்லி கடை’யைத் தொடர்ந்து இந்தியில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகிறது. இதற்கிடையே இம்மாத கடைசியில் தனுஷ் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ‘போர்த் தொழில்’ படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா, அடுத்து தனுஷை இயக்குகிறார். ‘குபேரா’வின் படப்பிடிப்பின் போதே, ‘போர்த்தொழில்’ இயக்குநரின் பட ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்து விட்டன. இப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு சொந்தமான இடத்தில் இந்த படத்திற்கான செட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கதாநாயகி மற்றும் இதர நடிகர்கள் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.