இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கடந்த 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய நிலையில், இந்தியாவே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டியின் ரிசல்ட் தலைகீழாக இருந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி 140 ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது பேட்டிங் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அனுபவமற்ற பந்துவீச்சு மற்றும் சொதப்பலான ஃபீல்டிங்கையே பார்க்கப்படுகிறது. பும்ராவை, ஜடேஜாவை தவிர்த்து அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை.
அதேபோல் ஃபீல்டிங்கில் ஜெஸ்வால் மொத்தமாக 4 கேட்சுகளை விட்டிருந்தார். குறிப்பாக அவர், பென் டக்கெட்டின் கேட்ச்சை விட்டிருந்தார். அப்போது அவர் 96 ரன்களை எடுத்திருந்தார். அந்த கேட்சை பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம். இந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 02) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி 6ஆம் தேதி வரை நடைபெறும்.
பிட்ச் மற்றும் வானிலை
போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதான் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் போட்டி நடைபெறும் 5 நாட்களில் முதல் மூன்று நாட்கள் மழை இருக்காது என்றும் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், போட்டி நடைபெறும் 5 நாட்களும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் காற்றில் ஈரப்பதம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 320 ஆக உள்ளது. இரு அணிகளுக்குமே இப்போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதால், போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். மேலும், ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதனை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொள்ள நினைக்கும். இந்திய அணியின் பேட்டர்கள் மிகவும் கவனமாக பேட்டிங் செய்ய வேண்டும். அதேபோல் கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்த காரணத்தினால், இப்போட்டியில் அதனை சரி செய்ய நினைப்பார்கள். எனவே பந்துவீச்சை பொறுத்தே இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி இருக்கும்.
மேலும் படிங்க: 11 பேர் இறப்புக்கு ஆர்சிபி அணியே முழு காரணம்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தடையா?
மேலும் படிங்க: தட்டி தூக்குவோம்.. சஞ்சு சாம்சனை வாங்குவது குறித்து CSK முக்கிய தகவல்!