அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய எங்களது ஒப்புதல் அவசியம்: சீன அரசு திட்டவட்டம்

பீஜிங்: அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்குமான பொறுப்பு காடன் போட்ராங் அறக்கட்டளை உறுப்பினர்களையே சாரும் என தலாய் லாமா இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் நடைமுறையில் தங்களது ஒப்புதலைப் பெறுவது முக்கியம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். 18-ஆம் நூற்றாண்டில் கிங் வம்ச பேரரசரால் அறிமுகப்படுத்தப்பட்ட தலாய் லாமா தேர்வு முறை பின்பற்றப்பட வேண்டும்.

திபெத்திய ஆன்மிகத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் நடைமுறையில் உள்ளன. சுதந்திரமான மத நம்பிக்கை கொள்கையை சீன அரசு கடைப்பிடிக்கிறது. அதேநேரத்தில், மத விவகாரங்கள் மற்றும் திபெத்தில் வாழும் பவுத்தர்களின் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் உள்ளன.

சீன மரபுகளுக்கு ஏற்ப மத நடைமுறைகளை வடிவமைக்கும் முயற்சி என்பது, அதன் கட்டுப்பாடு அல்ல. எந்தவொரு மதத்தின் வாழ்வும் வளர்ச்சியும் நாட்டின் சமூகச் சூழல் மற்றும் கலாச்சார மரபுகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதில்தான் உள்ளது. திபெத்திய பவுத்தம் என்பது சீனாவில் பிறந்தது, சீன பண்புகளைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் தரம்சாலாவில் தஞ்சமடைந்துள்ள 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.