சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர், 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 11 மேக வெடிப்பு சம்பவங்கள், 4 இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவை மண்டி மாவட்டத்தில் நடந்தன. திங்கள்கிழமை மாலை முதல் மண்டியில் மட்டும் 253.8 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களான கோஹர், கர்சோக் மற்றும் துனாக் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 32 மணி நேரத்தில் மட்டும் மண்டியில் இருந்து 316 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமீர்பூரில் 51 பேரும், சம்பாவில் மூன்று பேரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 406 சாலைகள் மூடப்பட்டுள்ளன, அவற்றில் 248 சாலைகள் மண்டியை சேர்ந்தவை. மண்டியில் மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 994 மின்மாற்றிகள் துண்டிக்கப்பட்டுள்ளன என மாநில அரசு தெரிவித்தது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல்துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக மண்டி துணை ஆணையர் அபூர்வ் தேவ்கன் தெரிவித்தார்.
மண்டியில் உள்ள அனைத்து முக்கிய ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பண்டோ அணையின் நீர்மட்டம் 2,922 அடியாக உயர்ந்து 2,941 அடி எனும் அபாயக் குறியை நெருங்கி வருவதால், அதிலிருந்து 1.5 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஹமீர்பூரில், பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல்லா கிராமத்தில் இருந்து 30 தொழிலாளர்கள் உட்பட 51 பேர் மீட்கப்பட்டனர்.
ஜூன் 20 ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து இமாச்சலப் பிரதேசம் ரூ.500 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.