வாஷிங்டன்: ‘காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது பிரதிநிதிகள் இன்று காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது, அதே நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
போர்நிறுத்தம் ஏற்பட கடுமையாக உழைத்த கத்தார் மற்றும் எகிப்தியர்கள், இதற்கான இறுதி திட்டத்தை வழங்குவார்கள். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில் நிலைமை சிறப்பாக மாறாது, மோசமாகிவிடும்.” என்று கூறி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸை எச்சரித்தார்.
காசா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற விஷயங்களைப் பற்றி அமெரிக்க மூத்த நிர்வாக அதிகாரிகளுடன் இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் நேற்று வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் உணவுக்காக நிவாரண முகாம்களுக்கு வரும் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் கொடிய வன்முறை காரணமாக, சேவ் தி சில்ட்ரன், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஆக்ஸ்பாம் போன்ற 150 க்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் இஸ்ரேல், அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் நிவாரண விநியோக அமைப்பை கலைக்க கோரிக்கை விடுத்துள்ளன. சமீபத்திய நாட்களில் உணவுக்காகக் காத்திருந்த பல பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.