புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கோவிட்-க்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள், கோவிட் 19 தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக நிரூபித்துள்ளன. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) நடத்திய ஆய்வுகள், இந்தியாவில் உள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இவை மிகவும் அரிதாகவே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது”என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், “மரபியல், வாழ்க்கை முறை, ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மற்றும் கோவிட்-க்குப் பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் திடீர் மாரடைப்பு உயிரிழப்புகள் ஏற்படலாம். கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் கருத்துகள் தவறானவை. இவற்றுக்கான ஒருமித்த கருத்து கொண்ட ஆதாரங்கள் இல்லை என்பதை அறிவியல் நிபுணர்கள் மீண்டும் உறுதிசெய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெபாலி ஜரிவாலா மரணம்: கடந்த வாரம் மும்பையில் மாரடைப்பால் காலமான நடிகை ஷெபாலி ஜரிவாலாவின் மரணம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது. 42 வயதான ஷெபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியே காரணம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
2020-ம் ஆண்டு முதல் மாரடைப்பு காரணமாக இளம் வயதினர் பலரின் திடீர் மரணங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கோவிட் தடுப்பூசிகள்தான் இத்தகைய திடீர் மரணங்களுக்கு காரணம் என்ற சந்தேகத்தையும் அவ்வப்போது சிலர் எழுப்பி வருகின்றனர்.