குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது விளக்கம் தந்துள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னலின் சட்டகம் விலகியது.
அதை கவனித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதோடு விமான பயண பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். இது வைரலான நிலையில் அந்த விமானம் புனேவில் தரையிறங்கியதும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அது தொடர்பாக விளக்கம் தந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் Q400 ரக விமானம் ஒன்றின் உட்புற ஜன்னல் சட்டகம் விலகியது. இது நிழலுக்காக ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை என ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது. மேலும், விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்றும் விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.