புதுடெல்லி,
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பலத்த பாதுகாப்பையும் மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்தனர். எம்.பி.க்கள் இருக்கை மீது தாவி குதித்து ஓடினர். தங்கள் கைகளில் இருந்த வண்ண புகைக் குப்பிகளை வீசினர். அதில் இருந்து வெளிப்பட்ட மஞ்சள் நிற புகை. நாடாளுமன்றம் முழுவதும் பரவியது. இதுதவிர, “சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்” என்று கோஷங்களும் எழுப்பினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண்ணும், இளைஞரும் இதேபோல செய்தனர்.
இந்த சூழலில் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் இதேபோன்று புகை குப்பிகளை பயன்படுத்தியதற்காக மேலும் இருவரை UAPA சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு (நீலம் ஆசாத், மகேஷ் குமாவத்) டெல்லி ஐகோர்ட்டு இன்று (02-07-2025) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் வண்ண புகை குப்பிகளை பயன்படுத்தியவர்கள் மீது ஏன் ‘உபா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது? என்றும் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. வண்ண புகை குப்பிகளை பயன்படுத்துவது பயங்கரவாத செயலா? அப்படியெனில் ஒவ்வொரு ஹோலி பண்டிகையின்போதும் வண்ண புகை குப்பிகளை பயன்படுத்துவோர் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.
ஆபத்து இல்லாத வண்ண புகை குப்பிகளை எடுத்து செல்வது உபா சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக டெல்லி போலீசார் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த மே 21ம் தேதி தங்களது உத்தரவை ஒத்தி வைப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நாடாளுமன்ற வளாகத்தில் புகை குப்பிகளை பயன்படுத்திய இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த உத்தரவில், ஜாமீன் பெற்றவர்கள் பத்திரிகை செய்தி ஊடகங்களுக்கோ, யூடியூப் சேனல்களுக்கோ பேட்டி எதுவும் கொடுக்கக்கூடாது என்றும், விசாரணை முடியும் வரை டெல்லியை விட்டு வெளியே போகக்கூடாது என்றும், சோஷியல் மீடியாக்களில் வழக்கு தொடர்பாக எந்த கருத்துக்களையும் பதிவிட கூடாது என்றும், ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.