புதுடெல்லி,
இந்தியாவில் பொதுவாக ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதேபோல, மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக இது உள்ளது.
இந்த நிலையில்தான் , பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் பிடித்தம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த மாற்றத்தை கொண்டு வந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. கனரா வங்கியும் கடந்த ஜூன் மாதம் , இதே போன்று மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்து இருந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், குறைந்தபட்ச இருப்பு தொகையாக ஊரக பகுதிகளில் ரூ 1,000-ம், நகர்ப்புறங்களில் ரூ.2,000-ம், சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் ரூ 5,000- பராமரிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.