தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மேற்கு மற்றும் மத்திய மாலியின் பல இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது கடந்த ஜூலை 1 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது கேய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவைச் சேர்ந்த 3 தொழிலாளர்களையும் கடத்திச் சென்றனர்.

இந்திய அரசு இந்த மோசமான வன்முறைச் செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி அரசாங்கத்தை இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது. அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இந்திய நாட்டினரைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிக்க பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், மாலி அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடமும் தொடர்பில் உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை மீதான தாக்குதல், அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுவான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) மாலியின் செனகல் எல்லைக்கு அருகிலுள்ள டிபோலி மற்றும் அருகிலுள்ள கெய்ஸ் மற்றும் சாண்டேர் நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்தது. அதே நாளில் மவுரித்தேனியா நாட்டின் எல்லைக்கு அருகில் பமாகோவின் வடமேற்கே உள்ள நியோரோ டு சஹேல், கோகோய் மற்றும் மத்திய மாலியில் உள்ள மொலோடோ, நியோனோ ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.