Ravi Shastri, Bumrah : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிம்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், பணிச்சுமையை குறைப்பதற்காகவும் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை என இந்திய அணி நிர்வாகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பிளேயர் ரவி சாஸ்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்தும், ஓய்வு எடுப்பது குறித்தும் எந்த பிளேயரும் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடாது, அணி நிர்வாகம், குறிப்பாக, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தான் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி பேசும்போது, ” இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்து கிட்டதட்ட 6 நாட்கள் ரெஸ்ட் கிடைத்த பிறகு, இன்னும் ஓய்வு தேவை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிட்னஸாக இருக்கும் ஒரு பிளேயருக்கு இந்த ஓய்வு போதுமானது. அதேநேரத்தில் தான் விளையாடுவது, அணியில் இடம்பெறுவது குறித்தெல்லாம் ஒரு பிளேயர் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. அணி நிர்வாகம் தான் அதை செய்ய வேண்டும். குறிப்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை மட்டுமே சரியானது. ஒரு பிளேயர் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பது அணிக்கு சரியானது அல்ல” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, தன்னுடைய உடல்நிலை குறித்து பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். பிட்னஸ் காரணமாகவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப்பையும் தான் ஏற்கவில்லை என பும்ரா ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்துவிட்டார். இதனை கருத்தில் கொண்டே ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பது குறித்து இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்பே இந்திய கிரிக்கெட் அணி முடிவெடுத்துவிட்டது. அவரை எந்த போட்டியில் ஆட வைக்கலாம் என்பது வரை தீர்மானித்துவிட்டதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருந்தார். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த அணுகுமுறை இப்போது கடும் விமர்சனக்குள்ளாகியுள்ளது.
அதேநேரத்தில் பிரிம்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் சுப்மன் கில் 150 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டார். அவருக்கு பக்கபலமாக களத்தில் ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப் கொடுத்து அவரும் அரைசதம் விளாசிவிட்டார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிப்பது உறுதியாகவிட்டது.