புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை மாநில சட்டப்பேரவையில் அரசு தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தலையங்கம் வெளியிட்டது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “யோசித்துப் பாருங்கள்… வெறும் 3 மாதங்களில், மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் புள்ளிவிவரமா? நிச்சயமாக இல்லை. உண்மை என்னவென்றால், 767 குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த 767 குடும்பங்களால் இனி ஒருபோதும் மீள முடியாது. ஆனால், அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. அது அலட்சியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்குகிறார்கள். விதைகள் விலை அதிகம், உரங்கள் விலை அதிகம், டீசல் விலை அதிகம். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்கள் கடன் தள்ளுபடி கோரும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஆனால் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள்? மோடி அரசாங்கம் அவர்களின் கடன்களை எளிதில் தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்திகளைப் பாருங்கள் – ‘எஸ்பிஐ வங்கியில் அனில் அம்பானி ரூ.48,000 கோடி மோசடி.’
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறியிருந்தார். ஆனால், நமக்கெல்லாம் உணவு அளிக்கும் விவசாயிகளின் வாழும் காலம் பாதியாகக் குறைக்கப்படும் அளவுக்கே தற்பேது நிலைமை உள்ளது.
இந்த அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது – அமைதியாக, ஆனால் தொடர்ந்து. அதேநேரத்தில், பிரதமர் மோடி, தனது சொந்த மக்கள் தொடர்பு காட்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.