புதுடெல்லி: கானா, நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தையொட்டி பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் பங்கேற்றுப் பேசவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருப்பார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். முதலாவதாக நேற்று மாலை அவர் கானா சென்றடைந்தார்.
டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: முதலில் ஆப்பிரிக்காவின் மதிப்புமிக்க நட்பு நாடும், உலகளாவிய தெற்கின் முக்கிய பங்காளியுமான கானா நாட்டுக்குச் சென்றடைவேன். அங்கு அதிபர் ஜான் டிராமணி மகாமாவுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, பல்வேறு துறைகளில் இந்தியா-கானா நாடுகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.
ஜூலை 3, 4-ம் தேதிகளில், இந்தியா வரலாற்று ரீதியாகப் பிணைந்துள்ள நாடான டிரினிடாட் & டொபாகோவில் இருப்பேன். அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிஸ்சேஸருடனான சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிக்கும்.
இதைத் தொடர்ந்து அர்ஜென்டினாவுக்குச் செல்ல உள்ளேன். இந்தப் பயணத்தின் போது அதிபர் ஜேவியர் மிலேயுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளேன். பிரேசில் பயணத்தின்போது, ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன்.
ரியோ நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது உலகத் தலைவர்களுடன் பல்வேறு சந்திப்புகள் இருக்கும். இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி விவாதிக்க அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அதன் பிறகு நமீபியா நாட்டுக்கு பயணம் செய்ய உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.