மும்பை,
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முன்னணி வீரர்களான பென் டக்கெட், ஆலி போப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி இங்கிலாந்துக்கு பின்னடைவை கொடுத்தனர்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 30 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஹாரி புரூக் 52 ரன்களுடனும், ஜேமி சுமித் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பில்லை என்று இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ர தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்த போட்டியில் இந்திய அணி போதுமான ரன்கள் அடித்து ஒரு சிறந்த இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், இங்கிருந்து ஒரு அணி மட்டுமே வெல்ல முடியும், அது இந்தியா மட்டுமே. இல்லையெனில் போட்டி டிராவில் முடியும். இங்கிருந்து இங்கிலாந்து வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது” என்று கூறினார்.