மும்பை,
ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 26-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 27-ம் தேதி இங்கிலாந்தையும், 29-ம் தேதி வெஸ்ட் இண்டீசையும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் தலைமையிலான அந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற நடத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி : யுவராஜ் சிங் (கேப்டன்), ஷிகர் தவான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, குர்கீரத் மான், வினய் குமார், சித்தார்த் கவுல், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன் மற்றும் பவான் நெகி