‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் and டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார்.

அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்தார். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாக, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, டிரினிடாட் & டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்கள் வரவேற்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நடத்திய விருந்தில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவிலிருந்து எடுத்துவந்த புனித நீரையும் நான் வழங்கினேன். இவை இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மிக பிணைப்புகளை அடையாளப்படுத்துகின்றன’ எனக் குறிப்பிட்டார்

இதனை தொடர்ந்து டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரை ‘பிஹாரின் மகள்’ என்று அழைத்தார், மேலும், கமலா பெர்சாத்தின் மூதாதையர்களுக்கு பிஹாருடன் உள்ள உறவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.