திருப்புவனம் / மதுரை: அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளித்துள்ளது கண்துடைப்பாகும். அவர் இருக்குமிடத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன், ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. எஃப்ஐஆர் பதிவு செய்யாமல், அஜித்குமாரை காவல் நிலையத்தில் அடித்துள்ளனர். பின்னர் தனிப்படை போலீஸார் 2 நாட்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு அதிகாரி சொன்னார் என்பதற்காக 6 போலீஸார் சேர்ந்து அடித்துள்ளனர். 3 இடங்களில் சிகரெட்டால் சுட்டுள்ளனர்.
இந்த அளவுக்கு கடுமையாக தாக்க வேண்டிய அவசியம் என்ன? மேலதிகாரியின் அழுத்தம்தான் காரணம் என்றால், தலைமைச் செயலகத்திலிருந்து அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை தமிழக முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இச்சம்பவத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்தது பாஜகதான். அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளித்துள்ளது கண்துடைப்பாகும். அவர் இருக்குமிடத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர். 4 கி.மீ. தள்ளி வீட்டுமனைப் பட்டா கொடுத்துள்ளனர். போலீஸார் தாக்கும் வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஓரணியில் திரள வேண்டும்: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் நேற்று கூறும்போது, ‘‘தமிழக முதல்வர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம். யாருக்கு நஷ்டம் என்பதை மக்கள் சிந்தித்துபார்க்க வேண்டும். தவெக தலைவர் விஜய் உட்பட திமுக வர வேண்டாம் என யாரெல்லாம் நினைக்கிறார்களோ, அவர்கள் ஓரணியில் திரள வேண்டும்’’ என்றார்.