தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, தன்னோட நடிப்பால அசர வெச்ச, பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்களாலும் ‘மகளே’, ‘மோளே’ன்னு கொண்டாடப்பட்ட நடிகை ஷோபாவைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..!

1962-ல பிறந்து 1980-ல உதிர்ந்துபோன நடிப்பு தேவதை ஷோபா. இவங்களோட சொந்த ஊர் கேரளா. ஷோபாவோட அம்மா பிரேமாவும் நடிகைதான். கிட்டத்தட்ட 100 மலையாளப்படங்கள்ல சப்போர்ட்டிவ் கேரக்டர்கள்ல நடிச்சவங்க. ஸோ, நடிப்பு ஷோபாவுக்கு ஜீன்லேயே இருந்த விஷயம்தான். சின்ன வயசுல அவங்கம்மா சினிமா தியேட்டருக்கு போறப்போ எல்லாம் ஷோபாவையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்களாம். அங்க சினிமாவுல பாட்டு, டான்ஸ் வந்தா குழந்தை ஷோபாவும் ஆடிப்பாட ஆரம்பிச்சிடுவாங்களாம். அதனால, ஷோபாவோட அம்மாவுக்கு எப்படியாவது தன்னோட மகளை பெரிய ஹீரோயின் ஆக்கிடணும்கிற ஆசை இருந்திருக்கு. ஆனா ஷோபாவோட அப்பா கே.பி.மேனன், கல்யாணத்துக்குப்பிறகு நடிக்கக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுதான் ஷோபாவோட அம்மாவையே கல்யாணம் செஞ்சிருக்கார். கடைசியில ஷோபா அம்மாவோட ஆசைதான் நிறைவேறுச்சுன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா, அது எப்படி நிறைவேறுச்சு..?
ஷோபா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான். குட் ஷெப்பர்ட் கான்வென்ட்லதான் படிச்சிருக்காங்க. ஷோபா குடியிருந்த ஏரியாவுலதான் ஒளிப்பதிவாளர் மஸ்தான் வீடு இருந்திருக்கு. இவர் நடிகர் சந்திரபாபுவோட ஃபிரெண்ட். ஒருமுறை சந்திரபாபுவோட வீட்டுக்குப் போறப்போ ஷோபாவையும் அழைச்சிக்கிட்டுப் போயிருக்கார். அந்த நேரத்துல சந்திரபாபு தன்னோட ‘தட்டுங்கள் திறக்கப்படும்’கிற படத்துக்காக நிறைய குழந்தை நட்சத்திரங்களைத் தேடிட்டு இருந்திருக்கார். அவரோட கண்கள்ல குழந்தை ஷோபா பட, பெற்றோர்கிட்ட பர்மிஷன் கேட்டிருக்கார். ‘இந்த ஒரேயொரு படம் தான். அதுக்கு மேல நோ’ன்னு சொல்லி அனுமதிக் கொடுத்திருக்கார் ஷோபாவோட அப்பா. ஆனா, சினிமா ஷோபாவை விடுறதா இல்ல.

ஷோபா ரெண்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தப்போ, நடிகர் பிரேம் நசீரோட மலையாளப்படத்துல நாயகிக்கு தங்கை ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. இதுக்கப்புறம் நிறைய மலையாளப்படங்கள்ல குழந்தை நட்சத்திரமா ஷோபா நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுல ஒண்ணான ‘சிந்தூர செப்பு’ படத்துல சிறப்பா நடிச்சதுக்காக 1971-க்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசோட விருது ஷோபாவுக்கு கிடைச்சிருக்கு.
தொடர்ச்சியா பட வாய்ப்புகள்… விடாம ஷூட்டிங்… ஸ்கூலுக்கு சரியா போக முடியாததால, 5-ம் வகுப்போட ஷோபா படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. தொடர்ந்து சின்னச்சின்ன ரோல்கள்ல நடிச்சிட்டிருந்த ஷோபா தன்னோட 14-வது வயசுல ‘ஏகாகினி’ங்கிற படத்துல ஹீரோயினா தன்னோட கரியரை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க.

தமிழ்ல ‘அச்சாணி’யில் நடிகர் முத்துராமனோட தங்கை, ‘வைரம்’ படத்துல நடிகை ஜெயலலிதாவோட தங்கைன்னு சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிட்டிருந்த ஷோபா, ‘நிழல் நிஜமாகிறது’ படத்துல இரண்டு ஹீரோயின்கள்ல ஒருவரா நடிச்சிருப்பாங்க. அந்த குழந்தை முகத்துல, அந்தப்படத்துலதான் எத்தனை எத்தனை உணர்ச்சிகள். வீட்டு வேலைபார்க்கும் குறும்புக்காரி, சரத்பாபுவிடம் ஏமாந்து நிற்கும் அப்பாவிப்பெண், தன்னை ஒருதலையா காதலிக்கிற ஹனுமந்துவை பரிதாபமா பார்க்கிறதுன்னு, அந்த சின்ன முகம் நொடிக்கு நொடிக்கு நடிப்பை படம் முழுக்க வாரி வழங்கியிருக்கும். இந்தப்படம் வெளிவந்தது 1978-ல. அதே வருடத்துல தான் டைரக்டர் மகேந்திரனோட ‘முள்ளும் மலரும்’ படமும் வெளிவந்துச்சு. ரஜினியின் தங்கை வள்ளி கேரக்டர்ல அந்தப்படத்துல ஷோபா நடிச்சிருப்பாங்க. அந்த கேரக்டராவே வாழ்ந்திருப்பாங்க அப்படிங்கிற வார்த்தை கிளிஷேவா இருந்தாலும், அதைவிட ஆகச்சிறந்த வார்த்தையால ஷோபாவை நம்மால கொண்டாடிட முடியாது. இதே வருடம், கேரள அரசோட சிறந்த நடிகைக்கான விருதையும் ஷோபா வாங்கியிருக்காங்க.
ஷோபாவோட தற்கொலைக்குப் பிறகு, டைரக்டர் மகேந்திரன் ஆனந்த விகடனுக்குக் கொடுத்த இன்டர்வியூ ஒண்ணுல ஷோபா பற்றிய நினைவுகளை பகிர்ந்திருப்பார். ”முள்ளும் மலரும் படத்தோட டப்பிங் வேலை நடந்துக்கிட்டிருந்துச்சு. அன்னிக்கு டப்பிங் கொடுக்கிற பெண்கள் யாருமே வரலை. சரத்பாபுவோட ஜீப்புல ஏறி பெண்கள் கலாட்டா பண்ற காட்சி அது. கடைசியில அந்தக் காட்சியில வந்த அத்தனை பெண் கேரக்டர்களுக்கும் ஷோபாவே குரல் கொடுத்துட்டாங்க.

ஷோபா கிட்ட ‘முகபாவம் மட்டும் மாறிமாறி காண்பிக்கணும்’னு சொல்லிட்டு அவங்க முன்னாடி கேமராவை ஓடவிட்டா போதும். எங்க கட் சொல்றதுன்னு நமக்கே குழப்பமாகிடும். அந்தளவுக்கு சிறப்பா ரியாக்ஷன் கொடுப்பாங்க”ன்னு ஷோபாவை கொண்டாடியிருக்கிற மகேந்திரன், ”ஷோபாவோட மரணச்செய்தி எனக்குக் கிடைச்சதும், மாலையை வாங்கிக்கிட்டு, ‘வடபழனி’யிலே இருக்கற ஷோபா வீட்டுக்குப்போனேன். ஆனா, கடைசி வரைக்கும் நான் ஷோபா உடம்பை வெச்சிருந்த ரூமுக்குள்ள போகவேயில்லை. அழகான புஷ்பத்தைப் போல எந்நேரமும் சிரிச்சுக்கிட்டேயிருந்த அந்த முகத்தை சவமா களையிழந்த பிணமா பார்க்க என் மனசு இடம் கொடுக்கலே. I was so much disturbed in my inner mind”னு வருத்தத்தோட சொல்லியிருக்கார்.
‘வீட்டுக்கு வீடு வாசல்படி’யில ஈகோவால பிரிஞ்ச கணவன் – மனைவியை சேர்த்து வைக்கிற கேரக்டர். ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’யில விரும்பாத கணவனோட மனைவி. ‘ஏணிப்படிகள்’ படத்துல தியேட்டரை சுத்தம் செய்யுற பொண்ணு சினிமாவுல ஹீரோயினாகுற கேரக்டர். ‘அகல் விளக்கில்’ இட்லி விற்கும் அனாதைப்பெண், ‘அழியாத கோலங்களில்’ இந்துமதி டீச்சர். ‘பசி’யில குப்பைப்பொறுக்கும் பொண்ணு குப்பம்மா, ‘மூடுபனி’யில் சைக்கோவிடம் சிக்கிக்கொண்ட நாயகின்னு ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமான கேரக்டர்கள்ல, இந்த உலகத்தைவிட்டுப் போகணும்னு முடிவெடுக்கிறதுக்குள்ள ஷோபாங்கிற நடிப்பு தேவதை நடிச்சித் தீர்த்திடுச்சின்னு தான் சொல்லணும்.

ஜஸ்ட் 17 வயசுலேயே தன்னோட வாழ்க்கையை முடிச்சிக்கிட்ட ஷோபாவோட பர்சனல் வாழ்க்கையில ஒரேயொரு பிரச்னை இன்னிக்கு வரைக்கும் பலரால ஆதங்கமா பேசப்பட்டுக்கிட்டுதான் இருக்கு. ஆனா, ஷோபா அதுபத்தின கருத்துல தெளிவாதான் இருந்திருக்காங்க அப்படிங்கிறது அவங்க ஆனந்த விகடனுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில தெளிவா தெரியுது. அந்தப் பேட்டி இதோ…
நிருபர்: “உங்கள் முதல் கன்னடப் படமான கோகிலா’வில் உங்கள் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திருப்தி, தமிழில் மகேந்திரனின் ‘ முள்ளும் மலரும் ‘ படத்தில் உங்கள் ரசிகர்களுக்கு கிட்டிய மன நிறைவு, பாலசந்தரின் ‘ நிழல் நிஜமாகிறது ‘ படத்தில் உங்கள் ரசிகர்களுக்கு ஏற்பட்ட உற்சாகம், உங்களின் மற்ற படங்களில் கிடைக்கவில்லையே…”

ஷோபா: “பாலசந்தர் போன்ற ஒருசில டைரக்டர்கள் என்னை அவர்கள் கோணத்திலிருந்து நடிக்கச் சொல்வார்கள். நான் வேறுவிதமாகச் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். அதை அவர்களிடம் சொல்லவும் செய்வேன். என் விருப்பப்படியே நடித்துக் காட்டச் சொல்வார்கள். நடித்த விதம் அவர்களுக்குப் பிடித்திருந்தால், திருப்தியளிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தால், ‘அப்படியே செய் ‘ என்று பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்வார்கள். பாலசந்தர் போன்ற சில டைரக்டர்களிடமே என்னால் மனம் விட்டு என் அபிப்பிராயங்களைச் சொல்ல முடிகிறது. மற்றவர்களிடம் அப்படிச் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கமே அதற்குக் காரணம். ஆனால், நிச்சயமாக என் வரையில் என் மனத்துக்குத் திருப்தியளிக்கும் வகையில் நடித்திருப்பதாகவே நான் நம்புகிறேன்.”
நிருபர்: “எல்லாப் படங்களிலும் சோகமான மற்றும் குணச்சித்திர பாத்திரங்களிலேயே நடிக்கும் உங்களால் கிளாமர் ரோலில் வர முடியுமா; உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா?”
ஷோபா: “நிச்சயமாக எல்லாவிதமான கேரக்டர்களிலும் என்னால் சோபிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இதுவரை எனக்குக் குணச்சித்திரப் பாத்திரங்களே கிடைத்து வந்தன. இப்போது சில படங்களில் கிளாமர் ரோல் பண்ணுகிறேன். அதைப் பார்த்தால், உங்கள் அபிப்பிராயத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.”

நிருபர்: “எந்த அடிப்படையில் ரோல்களை ஒப்புக் கொள்கிறீர்கள்? ”
ஷோபா: “படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்னால், படத்தின் கதை, அதில் என் பங்கு ஆகியவை பற்றி நான். என் தாயார். மகேந்திரா ஆகியோர் உட்கார்ந்து டிஸ்கஸ் செய்த பிறகே ஒப்புக் கொள்கிறோம்.”
நிருபர்: “உங்களுக்கு ஒரு ரோல் பிடித்திருந்து, பாலுவுக்கு அது பிடிக்காமல் போய் விட்டால்….?
ஷோபா: நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பாலு எது சொன்னாலும் என் நன்மைக்காகத்தான் சொல்வார். என் வளர்ச்சிக்காகத்தான் எதையும் செய்வார் என்பதை நான் மனப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.

இத்தனை நம்பிக்கையா, பாசிட்டிவா இருந்த ஷோபா தான் அடுத்த சில மாசங்கள்ல, அதாவது 1980, மே ஒண்ணாம் தேதி, தூக்கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க. ‘என் மகளை சிறைப்பறவையாக்கினாங்க. அதுல இருந்து தப்பிக்கிறதுக்காகத்தான் என் பொண்ணு இந்த உலகத்தைவிட்டே போயிட்டா’ன்னு, ஷோபாவோட அம்மா அந்த நேரத்துல மனசொடிஞ்சு சில பேட்டிகள்ல பேசியிருக்காங்க. 1984-ல மகள் ஷோபா மாதிரி அவங்களும் தற்கொலை முடிவையே எடுத்திருக்காங்க.
தன்னோட நடிப்புத்திறமைக்காக ‘தேசிய விருது’, ‘ஊர்வசி விருது’ வாங்கின ஷோபா, இத்தனை சீக்கிரமா தற்கொலை முடிவு எடுத்தது திரையுலகுக்கு நிச்சயம் ஈடுசெய்ய முடியாத இழப்புத்தான்.
(நாயகிகள் வருவார்கள்)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR