India vs England, Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது.
தொடர்ந்து, ஜூலை 2ஆம் தேதி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிாலந்து அணிக்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 16 ஓவர்கள் விளையாடி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
India vs England: குறுக்கிட்ட மழை
இதனால், 5ம் நாளான இன்று 90 ஓவர்கள் இருந்தது. ஆனால், இன்று மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. பின்னர் ஆட்டம் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு தொடங்கியது. 80 ஓவர்களில் வெற்றிக்கு இங்கிலாந்து அணி 536 ரன்களையும், இந்திய அணி 7 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
India vs England: முதல் செஷனிலேயே ஆதிக்கம்
ஆனால், இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே போப் 24, ப்ரூக் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஜேமி ஸ்மித் – பென் ஸ்டோக்ஸ் ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த ஜோடி 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன் கடைசி ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச, அந்த ஓவரின் 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 2 செஷன்களில் 4 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என இந்தியாவின் பக்கம் ஆட்டம் முழுமையாக திரும்பியது. டிரா செய்வதும் கடினம் என்ற நிலை உருவானது.
India vs England: தொடரை சமன் செய்த இந்தியா
இருப்பினும் வோக்ஸ், ஸ்மித் உடன் சேர்ந்து போராடினார். இருப்பினும் வோக்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களிலேயே ஜேமி ஸ்மித் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜாஷ் டங் 2 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கார்ஸ் மற்றும் பஷீரும் பவுண்டரிகளை பறக்கவிட்டு இந்திய அணியின் பொறுமையை சோதித்தனர். இறுதியில் கார்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
India vs England: ஆகாஷ் தீப் சிறப்பான, தரமான சாதனை
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஆகாஷ் தீப் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 5 பேர் டாப் ஆர்டர் பேட்டர்கள் எனலாம். கடைசியாக, இங்கிலாந்தின் டாப் 5 பேட்டர்களில் 4 பேரின் விக்கெட்டை ஒரே இன்னிங்ஸில் 1976ஆம் ஆண்டில் மைக்கெல் ஹோல்டிங் எடுத்திருந்ததார். அதன்பிறகு, 49 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகாஷ் தீப் ஒரே இன்னிங்ஸில் இங்கிலாந்தின் டாப் 5 பேட்டர்களில் 4 பேரின் விக்கெட்டை எடுத்து மிரட்டி உள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் இந்திய அணியில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் இருவரும் இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
India vs England: ஆட்ட நாயகன் சுப்மான் கில்
சுப்மான் கில் இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 269 & 161 என 430 ரன்களை குவித்து பல சாதனைகளை படைத்திருந்தார். அதே கையோடு இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அடுத்த போட்டி வரும் ஜூலை 10ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.