திருப்புவனம்: திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: அஜித்குமாரை போலீஸார் அடித்தே கொன்றுள்ளனர். அவரைக் கொன்றவர்களுக்கும் இதுபோன்ற தண்டனை கொடுக்க வேண்டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசாரிக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் சிபிஐ உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வரதட்சணைக் கொடுமையால் 4 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. போதை வழக்கில் 2 நடிகர்களை கைது செய்து, இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றனர். திமுக ஆட்சி என்றாலே அராஜகமும், ரவுடியிசமும்தான். அனைத்து காவல் நிலையங்களிலும், கைதிகளை விசாரிக்கும் இடங்களிலும் சிசிவிடி கேமராக்களை பொருத்த வேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் காவல் துறை தாங்காது. மது ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அஜித்குமார் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிகிதாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் யார் என்ற விவரங்களை வெளியிட வேண்டும். கனிமவளக் கொள்ளை, லஞ்சம், ஊழல், போதைப் பொருள் புழக்கம் போன்ற பிரச்சினைகளை திசைதிருப்ப ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளனர்” என்றார்.