பர்மிங்காம்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்துள்ளது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. அதேவேளை இந்தியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே மழை காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு போராடாமல் இருக்காது என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மார்கஸ் டிரெஸ்கோதிக் கூறியுள்ளார். அதே சமயம் நிலைமை கைமீறினால் டிராவுக்காக விளையாட வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்க தாங்கள் ஒன்றும் முட்டாள் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஒவ்வொரு சூழ்நிலையும் சவாலானது என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக, நீங்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வெற்றி மற்றும் தோல்வியைப் பற்றி மட்டுமே சிந்திக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல. இதுவரை நாங்கள் டிரா பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் இந்த முறை நாங்கள் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக விஷயங்களைச் செய்துள்ளோம், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
ஆனால் இது ஒரு சவாலான இலக்கு என்பதை புரிந்துகொள்ளாத அளவுக்கு நாங்கள் அப்பாவிகள் அல்ல. சில வீரர்கள் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை எடுக்கலாம். இறுதியில் அது வீரர்கள் சூழ்நிலையை புரிந்து எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தது. ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், எங்கள் அணி கடந்த காலத்தில் இருந்ததை விட வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது”என்று கூறினார்.