மகாராஷ்டிராவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி படிக்கவேண்டும் என்று ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவினர் கோரி வருகின்றனர். மும்பை மீராபயந்தர் பகுதியில் கடைக்காரர் ஒருவர் மராத்தி பேசவில்லை என்பதற்காக அவரை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினர் தாக்கினர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. இத்தாக்குதலை கண்டித்து மீராபயந்தர் பகுதி வியாபாரிகள் ஒரு நாள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து இத்தாக்குதலில் ஈடுபட்ட நவநிர்மான் சேனாவினர் 6 பேர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தற்போது மேலும் ஒரு தொழிலதிபர் நவநிர்மாண் சேனாவினரின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். சுனில் கெடியா என்ற தொழிலதிபர் ராஜ் தாக்கரேயின் எக்ஸ் தள பக்கத்தில், நான் 30 ஆண்டுகளாக மும்பையில் இருக்கிறேன்.

உங்களின் மோசமான தவறான நடத்தையால், உங்களைப் போன்றவர்கள் மராத்தியர்களை பாதுகாப்பது போல் நடிக்க அனுமதிக்கப்படும் வரை, நான் மராத்தியைக் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதிபூண்டுள்ளேன். என்ன செய்வீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து சுனில் அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் செங்கலால் தாக்கினர். அவர்கள் சாக்குமூட்டை ஒன்றில் செங்கலை கொண்டு வந்து தாக்கி அலுவலகத்தை சேதப்படுத்தினர். இதையடுத்து சுனில் மீண்டும் அதே எக்ஸ் தள பக்கத்தில், நூற்றுக்கணக்கான நவநிர்மாண் சேனா தொண்டர்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்துவதால் என்னை சுத்தமான மராத்தி பேசுபவராக மாற்றப்போவதில்லை.
அன்பு மட்டும்தான் மக்களை ஒன்றிணைக்கிறது. அச்சுறுத்தல் கிடையாது. என்னால் சுத்தமான மராத்தி பேச முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எதாவது வார்த்தையை தவறாக பேசினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எனக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நிர்வாகி சந்தீப் தேஷ்பாண்டே வெளியிட்ட எக்ஸ்தள பக்க பதிவில், “சுனில் தொழிலில் கவனம் செலுத்தவேண்டும். மராத்தி குறித்து எதுவும் தவறாக பேசக்கூடாது. மராத்தியை அவமதித்தால் காதில் அடிவிழும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை தொடர்ந்து தொழிலதிபர் சுனில் தான் இதற்கு முன்பு பதிவிட்ட பதிவுகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “சர்ச்சையைப் பெற விரும்புபவர்களால் இது கையாளப்படுகிறது. மராத்தி தெரியாதவர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டதால், நான் மிகையாக எதிர்வினையாற்றினேன். எனது மிகையான கருத்துக்களை நான் திரும்பப் பெற வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன்”என்று கூறினார்.