கஞ்சம்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) என்ற அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இது அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் மாலியில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள், மாலி ராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து செயல்படுகின்றனர்.
இந்நிலையில் மேற்கு மாலியில் உள்ள காயெஸ் என்ற இடத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை வளாகத்துக்கு சென்ற தீவிரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் சிலரை கடத்திச் சென்றனர். இதில் 3 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன்(28) என தெரியவந்துள்ளது. ப்ளூ ஸ்டார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், 6 மாத சிறப்பு பணிக்காக மாலியில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாலி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.