இந்தியாவிலேயே முதல்முறையாக நாக்பூரில் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பினை நீக்குவதற்காக புதிய வகை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேசர் சிகிச்சை என பெயரிட்டுள்ளனர். இதன் மூலமாக அதிக வலிமை கொண்ட வெளிச்சத்தினை கேத்திட்டர் மூலமாக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, அங்கு உள்ள அடைப்புகளை ரத்த குழாய்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு நீக்க முடியும்.

பொதுவாக இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு குறிப்பாக ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு ஸ்டண்ட் அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் மூலமாக சிகிச்சை மேற்கொள்வர். அவற்றிற்கு மாற்றுவழியாகவே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லேசர் தொழில்நுட்ப சிகிச்சை என்பது ஒருவகை அறுவை சிகிச்சையாகும். இதன் மூலம் சக்தி வாய்ந்த லேசரினை வைத்து ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை ஆவியாக மாற்றி அவற்றை நீக்கிவிடுவார்கள். இதுவரை 55 நோயாளிகளுக்கு இந்த முறை அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவ்வாறு லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஸ்டண்ட் வைக்க வேண்டிய தேவை இருக்காது. மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டண்ட் வைக்கவேண்டிய தேவையிருந்தால் அவர்களுக்கு பலூனை ரத்தக்குழாய்களில் அனுப்பி அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் ஸ்டண்டினை சரியான இடத்தில் வைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. ஒருசில நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்த பிறகு ரத்தக்குழாயின் அளவு குறைந்து காணப்படும். இதனால், ரத்த ஓட்டம் குறைந்து உயிர் பிரிவதற்குகூட அதிக வாய்ப்புள்ளது. இவற்றிற்கு மாற்றுவழியாகவே லேசர் சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த லேசர் தெரபி மிகவும் எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் துல்லியமாகவும் செயல்படுகிறது. மேலும், இவை நோயாளிக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கினை குறைத்து உடல் விரைவில் சீராக செயல்பட உதவுகிறது. இதனால், இவை நீண்ட காலங்களுக்கு பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வதன் மூலமாக உடலில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னையும் கண்டறியலாம். மேலும், எந்தப்பகுதியில் அடைப்பை ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அடையாளம் கண்டு சிகிச்சை செய்யவும் மிகவும் உதவுகிறது எனவும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக அதிகம் எண்ணெய் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். இவற்றினை பிளேக் என குறிப்பிடுவர். இவை ரத்தக்குழாய்களில் படிய தொடங்கினால் காலப்போக்கில் அதிகமாக படிந்து ரத்தக்குழாயின் இருபக்கமும் மலைபோல காட்சியளிக்கும். இதனால், இதயத்திற்கும் உடல்பாகங்களுக்கும் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவும் சத்துக்களின் அளவு குறைந்து நெஞ்சுவலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவற்றை சரிசெய்ய அந்த அடைப்பினை நீக்குவது மிக அவசியம்.
அதற்காக மருத்துவர்கள் ஒரு மெல்லிய ஒயர் போன்ற அமைப்பினை உள்ளே அனுப்புவர். அல்லது இடுப்புப்பகுதியில் சிறிதாக கிழித்து அதன் உள்ளே லேசரினை அனுப்புவர். அவை அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியினை சென்றடைந்த பிறகு லேசர் மூலமாக அந்த அடைப்பினை அகற்றுவதற்கு உதவும். இதனால் ரத்தக்குழாய்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது. பிறகு அந்த லேசரினை அகற்றி வெளியேற்றுவர். அந்த இடத்தினை தையல் போட்டு மூடிவிடுவர். இது மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சை செய்தால், நோயாளிகள் விரைவில் குணமடைவதால் அவர்கள் மருத்துவமனையில் அதிக காலம் இருக்க வேண்டிய தேவை குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…