ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரை நெடுஞ்சாலையின் ஒதுக்குப் பகுதியில் 1920-ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல் நினைவுச் சின்னம் இருக்கின்றது. அதன்மீது ஒரு பளிங்குத் தகடு பொறிக்கப்பட்டுள்ளது. அதில், பழங்குடியின மக்களின் கவிஞராக அறியப்படும் ஹென்றி கெண்டாலின் ‘கல்லில் பொறிக்கப்பட்ட பெயர்கள்’ என்ற கவிதையிலிருந்து ஒரு பத்தி இவ்வாறாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.
நராராவின் மணலுக்கப்பால்
ஒரு பள்ளத்தாக்கில் கற்குளம் இருக்கிறது
மலர்கள் நிறைந்த தேவலோக மனிதரிடமிருந்து
மலைகள் அதை மறைத்துவிட்டன
ஆனால் அழகான, தனிமையான
எங்களது வசிப்பிடத்தைப் பார்த்தவுடன்
கனவில் கூட கற்களின் மீது
பெயர்களைக் காண்பதை நிறுத்திவிட்டேன்

முதலில் ஆங்கிலேயர்கள்தான் இப்பெரிய தீவில் குடியேறினர். அதனால் ஆஸ்திரேலிய இலக்கியமென்பது, ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் இலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது. முதலில் நாட்டுப்புறப் பாடல்கள், துடிப்பான பாரம்பரிய பாடல்களோடு தொடங்கியிருக்கிறது. அன்றைய பழங்குடியினச் செவ்வியல் கவிஞராக அடையாளம் காணப்பட்டவர் ஹென்றி கெண்டால். காலனித்துவக் காலத்தில், குறிப்பிடத்தக்க சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தும் படைப்புகளை வெளியிட்டார். அவரது கவிதைகள் பெரும்பாலும் ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் அழகியலையும், பழங்குடியின தவிப்புகளையும் பேசுகின்றன. இயற்கையுடனான ஆழமான தொடர்பையும் தனித்துவமான சூழலில் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரதிபலிக்கின்றன.
அவரின் தாத்தா தாமஸ் கெண்டால், இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு நியூசிலாந்தில் மிஷனரி பணிக்காக லண்டனில் உள்ள சர்ச் மிஷனரி சபைக்குத் தன்னை அர்ப்பணித்தார். பின்னர், நியூசிலாந்திற்கு முதல் மாஜிஸ்திரேட்டாக அனுப்பப்பட்டார். அப்போது மௌரிகள் (Maori) என்ற சமூகத்துடன் நெருக்கமாகப் பழகி, அவர்களது மொழியைக் கற்றுக்கொண்டு , 1815-இல் “A Korao no New Zealand” என்ற ஆரம்பப்பாட நூலை சிட்னியில் அச்சிட்டு வெளியீடு செய்திருக்கிறார்.
1820-இல், அவர் மௌரி தலைவர்களுடன் இங்கிலாந்துக்குச் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மௌரி மொழிக்கு இலக்கணமும் சொற்களும் அமைத்து அதனை நூலாக வெளியிட்டுள்ளார். அவரது மிஷனரி பணிக்காக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் 1280 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அங்கு, மர வியாபாரம் செய்தவர், அதனுடன் ஒரு சிறிய கப்பலும் வைத்திருந்தார். 1832-இல் கப்பல் சிட்னிக்கு அருகே விபத்தில் மூழ்கி சிதைந்துவிட அவருடன் சேர்ந்து அனைவரும் உயிரிழந்தனர்.

1839 ஆம் ஆண்டுப் பிறந்த ஹென்றி கெண்டால் தனது 17 ஆவது வயதில் சிட்னி நகருக்குக் குடும்பத்துடன் குடியேறுகிறார். தாயாருக்கு உதவி செய்ய விரும்பி ஒரு கடையில் உதவியாளராகப் பணியில் சேர்கிறார். அப்போது பிரபல வசனகர்த்தாக்களின் தொடர்பு கிடைக்கிறது. அதன்மூலம் வசனம் எழுதும் வாய்ப்புடன், நூலகத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கிடைக்கிறது. முதலில் கவிதைகளை எழுதி லண்டனில் வெளியான இதழ் ஒன்றிற்கு அனுப்புகிறார், முதன்முதலாக மூன்று கவிதைகள் அச்சில் வெளியாகின்றன. தொடர்ந்து கவிதைகள், பாடல்களைத் தொகுத்து முதல்நூலை சிட்னியில் வெளியீடு செய்கிறார். அந்த நூல் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கிட்டத்தட்ட ஐநூறு பிரதிகள்வரை அக்காலத்தில் விற்பனையானது.
கவிஞராக அறியப்பட்ட பின்பு அரசாங்கப் பதவி கிடைக்கிறது. தனது குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டியபின் சிட்னியில் மருத்துவரின் மகள் சார்லட் ரட்டரை மணந்தார். குடும்பத்தின் வசதியான வாழ்வியல் முறை அவருக்குப் பண நெருக்கடியை ஏற்படுத்தியது. சம்பாத்தியத்தைப் பெருக்குவதற்காக வெறொரு பெரிய நகருக்கு இடம்பெயர்வது நல்லதென முடிவு செய்து, அடுத்த ஆண்டே அரசாங்க பதவியிலிருந்து விலகி மெல்பர்னுக்குச் செல்கிறார். அது சிட்னியை விடப் பெரிய நகரமாகவும் இலக்கிய மையமாகவும் விளங்க, தெற்கு மெல்பர்ன் அவரை வரவேற்கிறது. அங்கே சக எழுத்தாளர்கள் நட்புடன் ஹம்பக் என்ற இதழில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இருப்பினும், கெண்டால் ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளருக்குரிய எந்தக் குணங்களையும் கொண்டிருக்கவில்லை. அவரது சில படைப்புகள் மட்டுமே பத்திரிகைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வருமானம் அதிகமின்றிக் கெண்டால் மனம் தளர்ந்துபோய், குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் அப்பழக்கத்திற்கு அடிமையானதால், “உண்மையில் குடிப்பழக்கத்திற்கு ஆளானவரை இவ்வளவு மோசமாகப் பார்த்ததில்லை” என்பது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
அவரது நண்பர்களால்கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை, மெல்போர்னில் அவர் கழித்த இரண்டு ஆண்டுகள் வாழ்க்கையின் மிகவும் துன்பகரமானவை. ஒரு காசோலை மோசடி செய்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டு, பிறகு மனநிலை சரியில்லாதவரென்ற அடிப்படையில் குற்றவாளியல்ல என விடுவிக்கப்பட்டார். அவரது குடும்பத்தை ஆதரிக்க முடியாமல், வறுமை, உடல்நலக்குறைவுடன் குடிபோதையில் நலிந்து சிட்னிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இலக்கியம் எப்போதும் தொடரோட்டமாக இருக்கும்போதுதான் உத்வேகம் கிடைக்கிறது. இடைவெளிகள் இலக்கியத்தில் மனச்சோர்வினை ஏற்படுத்திவிடுகின்றன. இடையில் அவரது மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிவிட, கெண்டால் கைவிடப்படுகிறார்; மனநோய் மருத்துவமனையில் சில மாதங்கள் தங்கி சிகிச்சைப்பெற்ற பின் அவரது சகோதரர் வந்து அழைத்துச் செல்கிறார்.

‘Bell-Birds’ மணிப்புறாக்கள் என்ற கவிதை அவருக்குப் பெரும்புகழினை வாங்கித்தந்தது. ஆஸ்திரேலிய வனப்பகுதியின் அழகையும் அமைதியையும் கொண்டாடும் கவிதையாக, மணிப்புறாவை உருவகப்படுத்தி அழகியலுடன் எளிமையான மொழிநடையில் எழுதப்பட்ட நேரடியான கவிதையிது. வேர்ட்ஸ்வொர்த் கவிதையைப் படிப்பதுபோன்ற உணர்வினை எழுப்புகிறது. இயற்கையைக் கொண்டாடும் எந்தக் கவிதையானாலும் ஒரேவிதமான சங்கதிகளையும் தாளங்களையும் கொண்டிருப்பது இயற்கையே என்றாலும் மணிப்புறாக்களுடன் மாறிவரும் பருவங்களைத் தொடர்புப்படுத்துவதில் இக்கவிதை தனித்துவமானது.
மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக எதிரொலிக்கும் மணிப்புறாக்களின் குரல்கள் தூக்கத்தை விட மென்மையானது என்றாலும் அவை ‘வெள்ளிக் குரல் கொண்டவை’ என்று வர்ணிக்கிறார். வசந்தகாலமும், கோடையும், குளிரும் மாறிமாறி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, பருவக்காலங்களோடு சேர்ந்து பறக்கும் மணிப் புறாக்களின் இறகுகள் பச்சையும் ஊதாவும், நீலமும் தங்கமும் கலந்து நிலத்தைப் பிரதிபலிக்கின்றன.
அதோடு, பாதி வழியில் தொலைந்துப்போன பயணிகளுக்கும் வழிகாட்டுகிறது. ஒரு பறவை என்பது பறப்பதற்கான நம்பிக்கையைத் தருவதோடு தூதுசெல்வதும், வழிகாட்டுவதுமாக அன்புச் சின்னத்தின் குறியீடு என்கிறார். எப்படியிருந்தாலும் ஒவ்வொரு நாளும் எனது அதிகாலையைத் தனது குரலால் எழுப்பும் மணிப்புறாக்களின் கீதம் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
குளிரும் வாய்க்கால்களில்
எதிரொலிகள் கேட்கின்றன,
மயங்கும் பள்ளத்தாக்கில் சிற்றோடை
விழுகின்ற சத்தத்தைக் கேட்கிறேன்
அது மலையில் வாழ்கிறது
பாசியும் செடிகளும் அதன் விளிம்பினை
அழகாகத் தொட்டுச்செல்கின்றன
நீரோட்டங்களில் பாய்ந்தோடும் நீரின் சத்தமென்பது கூழாங்கற்களும் இலைகளும் ஒன்றையொன்று தீண்டி உருவாகும் சலசலப்புகள் பட்டுத்தெறிக்கின்றன. காடு என்பது வெறும் காடு மட்டுமல்ல, தவத்திற்கு உகந்தயிடம் காடு மட்டுமே. நகரத்தின் ஓரங்களிலும், இடையூறு நிரம்பிய வீதிகளிலும் கூட, நினைவுகளில் சுமக்க விரும்புவது மலைப்பள்ளத்தாக்குகளின் அழகும், இயற்கையின் நிம்மதியும் தான். அதனால்தான் அதிகாலையில் சன்னலுக்கருகே நாள்தோறும் என்னையெழுப்பிவிடும் அகவலோசைக்கு மனம் மயங்குகிறது.

1880-ல் கெண்டால் ‘Songs from the Mountains’- மலைகளிலிருந்து வரும் பாடல்களை மூன்றாவது தொகுதியாக வெளியீடு செய்கிறார். மேகங்களுக்கு மத்தியில் மிதக்கும் இசை போன்ற பாடல்களுடன் கோபுரம் போன்ற மலைகளைப் பாடும் இந்நூல் புகழ்பெற்று இழந்த நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்தியது.
‘On the Street’ என்ற கவிதை, எங்கெங்கோ சுற்றினாலும் பல நேரங்களில் கவிஞர்கள் குழாயடியிலும் அவர்கள் வீட்டுப் பெண்கள் கிழிந்த உடையிலும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வரிகள்.
அந்த மோசமான சாலையை வெறுக்கிறேன்,
அழுக்கான மைதானங்கள், அதன் காட்டுச் சந்துகள்;
அதன் கனவுகளில், எப்போதும் பார்க்கிறேன்
அழுதுகொண்டேருக்கும் மாயக் குழந்தையை;
அதன் பெயரே துக்கத்தைச் சொல்கிறது
ஓ, பாடல், அமைதியாக இரு! இனியும் பார்க்கவேண்டாம்
அந்தப் பெண்மணியைக் கிழிந்த உடையிலும்
அந்த அறிஞனைக் குழாயடித் தரையிலும்
எனக்கு இந்தக் கவிதையைப் படித்தவுடன் பிரான்சிஸ் கிருபாவைக் கண்முன்னே பார்த்தது போலிருந்தது. ஒரு கவிஞன் எந்தச் சூழலில் குழாயடிக்கு அல்லது சாலைக்கு வரும் சூழல் வருகிறது, எல்லாமே துக்கம் தான்.
ஆஸ்திரேலியாவின் தொடக்கம் அதன் பூர்வீகக் குடியிலிருந்து வந்தாலும் பழங்குடியினக் கவிதை குறிப்பாகக் கவனிக்கப்படவில்லை. வரலாற்று மரபுகளையும், இன்றைய புதுமையான படைப்புகளையும் வைத்து ஆஸ்திரேலிய பழங்குடி கலாச்சாரம் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என்றும் கருதப்படுகிறது, ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு புழக்கத்தில் இருந்த 250 பூர்வீக மொழிகளில், 150-க்கும் குறைவானவைத் தப்பிப்பிழைத்தன, மேலும் எண்ணிக்கை இன்று குறைந்துக்கொண்டே வருகிறது என்பது தனிக்கதை. பன்முகத்தன்மை கொண்ட பழங்குடி வாய்வழி மரபுகளில் சிலவற்றை அவை இழக்கப்படுவதற்கு முன்பே படியெடுத்து மொழிபெயர்க்க முடிந்ததென மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய ஆஸ்திரேலியாவில் கம்பீரமான பழங்குடியினரின் வாய்வழிப் பாடல்களை மொழியியல் கலைத்திறனுக்காக ‘பாடல் கவிதை’ என்றழைத்துக்கொண்டனர். அவை இயற்கையோடு பிணைந்த சடங்கு அல்லது சடங்கு சார்ந்ததாக இருந்தாலும், சில பாடல்கள் காதல், வேட்டை, தாவரங்கள், விலங்கினங்கள், குடியேற்றம், வரலாறு போன்றவற்றைப் பாடுகின்றன. ‘பழங்குடியினத்தின் கடைசி ஒருவன்’ என்ற இந்தக் கவிதை சான்று.
அவன் சுருண்டு, முழங்காலில்
முகத்தைப் புதைத்துக்கொண்டு
தனது தலைமுடியின்
இருளுக்குள் மறைந்துகொள்கிறான்
ஏனெனில் புயலால் தாக்கப்பட்ட
மரங்களைப் பார்க்க முடியவில்லை
அவனுடைய வலியையோ இழப்பையோ
அங்குள்ள தனிமையையோ
நினைத்துப் பார்க்க முடியவில்லை
அவனும் தூக்கத்திலேயே இந்தப் பாழடைந்த
நிலங்களிலிருந்து சென்றுவிடுவானா?
ஒரு தலைவனைப்போல்
தனது இனம் உறங்குமிடத்திற்கே செல்வானா
அங்கே தேன் குரலுடன் ஒருத்தி
சைகை செய்துக்கொண்டிருக்கிறாள்
அவனது முகம் ஒரு கனவு போல் மின்னுகிறது
அற்புதமான அந்தக் கனவிலா மின்னுகிறது முகம்?
பெரும்பாலும் ஒரு கதையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு சொல்லப்படும் கவிதைகள் அதன் ஆழங்களை எளிதாக உணர்த்திவிடுகின்றன. ஹென்றி கெண்டாலின் முதல் வரியிலேயே அவன் எதையும் பார்ப்பதற்குத் துணிவின்றி நடுக்கத்துடன் குனிந்து அமர்ந்துகொள்கிறான்- என்று தொடங்குகிறார்.

ஒருவன் தனியே நிற்கிறான், சிரிக்க மறந்த முகத்துடன் பழம்பாடல்களும் பூமராங்குகளும் வாழ்ந்த பாழ்மரபின் நிழலைப் போல் நிற்கிறான், அவனுடைய சொற்களைக் கேட்க எவருமில்லை. வானத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தன் இனத்தோடு வாழ்ந்த நிலாக்காலங்கள் கனவாக மிளிர்கின்றன. இத்துடன் எனது இனம் அழிந்துவிட்டது அதிலிருக்கும் கடைசி மனிதன் நான் மட்டுமே என்ற உணர்வு என்பது அழிந்துபோன இனத்தின் பரிதவிப்பின் மொழியாகவும், மௌனத்தின் குரலாகவும் அமைந்த கவிஞரின் குரல்.
இந்தக் கவிதை புதைத்துவைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டியெடுக்கிறது. புயலில் சிக்கி, இடி மின்னல் தாக்கி நொறுங்கிக் கிடக்கும் மரங்களில் இதயங்களைத் தேடுகிறது. அந்தக் கடைசி மனிதன் முடியாத கனவுகளைக் கண்டு, நினைவுகளோடு அங்கே தனியே அமர்ந்திருக்கிறான். நிராகரிக்கப்பட்ட இனத்தின் அடையாளமாக விரிகிறது.
எத்தனையோ தடங்கள், கலைகள், மொழிகள் போர்களுக்குப் பின் மடிந்தாலும் அவை வரலாறாக, நாடகமாக நமது மனத்தைப் பின்னிக்கொள்கின்றன. போரின் காயங்களைக் காலங்காலமாக நமது வரலாறு தீட்டிக்கொண்டிருந்தாலும் இன்னும் இழந்துக்கொண்டிருப்பது நெஞ்சத்தைப் பிளக்கவைக்கிறது.
அணையும்போது பளிச்சென எரியும் சுடரைப்போல் தேன் குரலில் அழைக்கும் பெண்ணின் பிம்பம் துயரம் நிறைந்த கனவு. நில உரிமைகளை மீட்பதும், புலம்பெயர்ந்த இனங்களின் போராட்டங்களோடு இணைத்துப் பார்த்தால் இது வெறும் வரலாற்றுச் சித்திரமின்றி, தொடரும் உண்மைகளின் அடையாளமாக விளங்குகிறது.
ஆனால் அவரது உடல்நிலை சரியாக இல்லை, நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருந்ததால் கடுமையான குளிர் தாங்கமுடியாமல் ஆகஸ்ட் 1, 1882 அன்று சிட்னியில் உள்ள ரெட்ஃபெர்னில் தனது 43ஆவது வயதில் காலமானார். அவரது உடல் வேவர்லி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஹென்றி கெண்டால் தனது 19வது வயதில் வாழ்வும் இலக்கியத்தின் அவசியமும் பற்றி எழுதிய கடிதம் இது.
ஐயா,
இந்தக் கடிதத்தையும் அதனுடன் இணைத்துள்ள கவிதைகளையும் வாசிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவை பதினாறு ஆயிரம் மைல்கள் தாண்டி வந்துள்ளன என்பதை நினைவில் கொள்க; அதனால் உங்கள் நேரத்தை ஒதுக்குவதற்கு யோசிக்க வேண்டியதில்லையென நம்புகிறேன். இக்கவிதைகள் கொஞ்சம் வளமையாக இருப்பதாகக் கருதுகிறேன். அதே நம்பிக்கையுடன் உங்கள் கருத்தும் அப்படியே இருக்குமென எதிர்பார்த்து அவற்றை உங்களுக்கு அனுப்புகிறேன்.
இந்தப் படைப்புகளில் ஒன்றாவது Cornhill Magazine தரத்துக்கு ஏற்றதாகத் தோன்றினால், தயவுசெய்து அதனை வெளியிடுங்கள். அதன்வழி எனக்கு உதவுகிறீர்கள். எனினும், அதற்கான வெகுமதி கட்டாயமில்லை. உங்கள் அங்கீகாரமே எனக்குப் பெரும் வெகுமதியாக அமையும்.
என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன், நான் இந்தக் குடியிருப்பில் பிறந்தவன். தற்போது 19வது வயதில் இருக்கிறேன். எனது கல்வி புறக்கணிக்கப்பட்டது. அதனால், கவிதைமொழி முதிர்ச்சியடையாமல் இருக்கக்கூடும். தற்போது ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில் பணியாற்றுகிறேன்; ஆனால், என் தாயாருக்கும் மூன்று சகோதரிகளின் செலவுகளுக்கும் எனது வருமானம் போதாது. எனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்புகிறேன். இந்தக் கவிதைகள் குறைந்தபட்சத் தரத்தினை எட்டியிருக்கின்றன என நீங்கள் கருதினால், அவற்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்தால் போதும்.

இந்நாட்டில் என்னை “முதல் ஆஸ்திரேலியக் கவிஞன்” என்று அழைக்கின்றனர். உண்மையில் என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து இந்த நாட்டின் சொந்த இலக்கிய வளர்ச்சியை விரும்பியிருந்தால், எனக்கொரு நல்லநிலையை ஏற்படுத்தியிருப்பார்கள். அப்படியிருந்தால், நான் உங்களை நாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இக்கவிதைகளில் ஒன்றாவது நன்றாக இருப்பதாக நீங்கள் கருதி அதை வெளியிட்டால், இங்குள்ள ஏதேனும் ஒருவர் மீதமுள்ளதைச் செய்வார். அவற்றில் எதுவும் சரியில்லையெனில், அக்கவிதை உணர்வுகளையும் அதன் ஆசிரியரையும் மறந்து விடலாம்.
இந்த வரிகளை வாசிக்க மறந்து விட மாட்டீர்களென நம்புகிறேன்.
மிகுந்த மரியாதையுடன்,
H. கெண்டால்
#சொற்கள் மிதக்கும்