“அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை

திருப்புவனம்: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொலை செய்த தனிப்படை போலீஸார் ஒரு சதவீத குற்ற உணர்ச்சிகூட இன்றி சட்டத்தை மீறி மிருகத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி வேதனை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். அப்போது பூமிநாதன் எம்எல்ஏ உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாருக்கு நடக்கக் கூடாத கொடிய சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த பெண்மணி காவலாளி மீது நகையைக் காணவில்லை எனப் புகார் அளித்த பின்பு அஜித்குமாரை போலீஸார் சித்திரவதை செய்து உயிர் போகும் வகையில் மிருகங்களாக மாறி அடித்தே கொன்றுள்ளனர்.

சாத்தான்குளத்தில் தந்தையையும், மகனையும் கொன்றதுபோல அஜித்குமாரையும் கொன்றுள்ளனர். இதில் தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கை வரும் என்ற வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். புகார் அளித்த பெண்மணி பற்றியும் பல புகார்கள் வருகின்றன. பேராசிரியருக்கு அர்த்தம் தெரியாத அப்பெண்மணி அளித்த புகாரின்படி போலீஸார் விசாரித்திருக்கலாம்.

ஆனால், சட்டத்தை மீறி மனிதாபிமானமற்ற முறையில் மிருகத்தனமாக தாக்கி ஒரு இளைஞரின் உயிரை பறித்த காவலர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறேன். இதுபோன்று இனிமேல் நடக்கக் கூடாது. காவல்நிலைய சித்திரவதை மரணங்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல. பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கிறது. இது அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

காவலர்கள் தடி கொண்டு தாக்கவோ, வயிற்றில் ஏறி மிதிக்கவோ சட்டம் அனுமதி தரவில்லை. சட்டத்தை மீறிய காவலர்கள் மனிதாபிமானமற்றவர்கள், ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள். அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி போராட்டத்துக்கு பிறகுதான் நடவடிக்கை எடுத்தார். இத்தகைய சம்பவம் யார் ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.