அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நேற்றிரவு (திங்கள்கிழமை) டொனால்டு ட்ரம்ப்பின் இரவு விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, ட்ரம்ப்பிடம் நெதன்யாகு ஒரு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய அவர், “அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமைதியை ஏற்படுத்துகிறார். எனவே, நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை நான் தற்போது தங்களுக்கு வழங்குகிறேன். அமைதிக்கான நோபல் பரிசு பெற நீங்கள் தகுதியானவர். நீங்கள் அதைப் பெற வேண்டும்” என கூறினார்.

நெதன்யாகுவின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப், “மிக்க நன்றி. நீங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பது எனக்குத் தெரியாது. குறிப்பாக, நீங்கள் என்னை பரிந்துரைத்திருப்பது உண்மையில் அர்த்தம் நிறைந்தது. மிக்க நன்றி. நான் போர்களை நிறுத்துகிறேன். மக்கள் கொல்லப்படுவதை நான் வெறுக்கிறேன்.” என தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. தங்கள் வசம் உள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

முன்னதாக, ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. பின்னர், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்று ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.