கெத்து காட்டிய இந்த 3 TNPL வீரர்கள்… மினி ஏலத்தில் IPL அணிகள் நிச்சயம் குறிவைக்கும்!

IPL 2026 Mini Auction: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கி ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெற்றது. கோவையில் தொடங்கிய டிஎன்பிஎல் சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றன. 

TNPL 2025: சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீசெம் மதுரை பாந்தர்ஸ் என 8 அணிகள் இந்த தொடரில் மோதின. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதின. 28 லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் போட்டிகள் உள்பட 32 போட்டிகள் நடைபெற்றன. 

லீக் சுற்றின் முடிவில் சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. திருப்பூர் – திண்டுக்கல் அணி இறுதிப்போட்டி வரை சென்று திருப்பூர் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2024ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணி இம்முறை 2வது இடத்தில் முடித்தது. லீக் சுற்றில் 7 போட்டிகளிலும் வென்ற சேப்பாக் அணி குவாலிஃபயர் 1 மற்றும் குவாலிஃபயர் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தது ஏமாற்றம் அளித்தது. திருப்பூர் அணி கடைசி நேரத்தில் பிளே ஆப் உள்ள வந்தும் எலிமினேட்டரில் திண்டுக்கல் அணியிடம் வீழ்ந்து வெளியேறியது.

TNPL 2025: டிஎன்பிஎல் மூலம் கவனம் பெற்ற வீரர்கள்

ஐபிஎல் தொடருக்கு பின் டிஎன்பிஎல் தொடர்தான் பலரும் கவனம் செலுத்தும் டி20 லீக் எனலாம். சாய் சுதர்சன், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி, ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த், நடராஜன், விஜய் சங்கர், குர்ஜப்னீத் சிங் என பலரும் டிஎன்பிஎல் தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் கவனம் பெற்றார்கள். அந்த வகையில், இந்தாண்டு நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் இந்த 3 வீரர்கள் அதிகம் கவனம் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரை சிஎஸ்கே (Chennai Super Kings) உள்ளிட்ட முன்னணி அணிகள் வரும் மினி ஏலத்தில் (IPL Mini Auction) நிச்சயம் குறிவைக்கும் எனலாம். 

IPL 2026 Mini Auction: துஷார் ரஹேஜா

துஷார் ரஹேஜா (Tushar Raheja) டிஎன்பிஎல் தொடரில் மட்டும் மொத்தம் 33 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 981 ரன்களை அடித்திருக்கிறார். கடந்தாண்டு 2024ஆம் ஆண்டு சீசனிலும் இவர் 9 இன்னிங்ஸ்களில் 324 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தார். இந்தாண்டு அவர் 9 இன்னிங்ஸ்களில் 488 ரன்களை அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். 

தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார். அதுவும் ஓப்பனிங் பேட்டர். இந்தாண்டு மட்டும் 32 சிக்ஸர்களை பறக்கவிட்டிருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 185.55 ஆக வைத்திருக்கிறார். கொல்கத்தா அணி தமிழக வீரர்களை எடுக்க அதிக ஆர்வம் காட்டும். அந்த வகையில் அவர்களின் ஓப்பனிங் பிரச்னையை தீர்க்க துஷார் ரஹேஜாவை கேகேஆர் வரும் மினி ஏலத்தில் குறிவைக்கலாம். டெல்லி அணி இவரை எடுக்கவும் வாய்ப்புள்ளது. 

IPL 2026 Mini Auction: சிவம் சிங்

துஷார் ரஹேஜா கடந்த 2 சீசன்கள் என்றால் கடந்த மூன்று சீசன்களாக சிவம் சிங் (Shivam Singh) சிறப்பான தரமான சம்பவங்களை செய்து வருகிறார். இவரும் ஓப்பனிங் பேட்டர்தான். ஐபிஎல் அணிகள் இவரை நம்பர் 3இல் கூட முயற்சிக்கலாம். 2023 சீசனில் 9 இன்னிங்ஸ்களில் 356 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3வது இடம், 2024 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 364 ரன்களுடன் அந்த பட்டியலில் முதலிடம், 2025 சீசனில் 9 இன்னிங்ஸ்களில் 327 ரன்களுடன் 4வது இடத்தை பெற்றிருக்கிறார். 

இறுதிப்போட்டியில் பீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பேட்டிங்கில் களமிறங்க முடியாமல் போனது. அவர் களமிறங்கியிருந்தால் நிச்சயம் பெரிய ரன்களை குவித்திருப்பார், திண்டுக்கல் அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருந்திருக்கும். அந்தளவிற்கு சிவம் சிங்கின் பேட்டிங் பெரிய தாக்கத்தை செலுத்தியிருக்கிறது என புரிந்துகொள்ளலாம். இவரையும் முன்னணி அணிகள் குறிவைக்கலாம்.

IPL 2026 Mini Auction: சோனு யாதவ்

டிஎன்பிஎல் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் சோனு யாதவும் (Sonu Yadav) ஒருவர். இவர் பேட்டிங்கில் 23 இன்னிங்ஸ்களில் 440 ரன்களையும், 29 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். இந்த சீசனில் இவர் பேட்டிங்கில் பெரியளவுக்கு சோப்பிக்கவில்லை என்றாலும் மொத்தம் 7 இன்னிங்ஸில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். சிக்ஸர் அடிக்கும் திறனும் கொண்டவர் என்பதால் நல்ல இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை தேடும் அணியும் இவரை குறிவைத்து தூக்கலாம். சிஎஸ்கேவுக்கு இந்த தேவை இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.