கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்களுக்கு ஆட்சியர் தரும் ‘அலர்ட்’ குறிப்புகள்

கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘நிபா வைரஸ் என்பது வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும். இது மூளை, இருதயம், ஆகியவற்றை பாதிக்கும். முதன் முதலில் 1998-1999-ல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நோய்த் தாக்கம் ஏற்பட்டது. கேரளாவில் 2018-ல் கோழிகோடு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. 2019-ல் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் இந்நோய் பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது.

நிபா வைரஸ் நோய் பரவும் விதம்: நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோய் ஆகும். இந்நோயை உண்டாக்கும் வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக பெருக்கமடைகின்றன. நோய்வாய்ப்பட்ட பழந்தின்னி வவ்வால், பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்: நிபா வைரஸ் நோய் மூளைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா மற்றும் மரணம் ஏற்படலாம். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை சுயநினைவு இழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்டறியும் முறைகள்: காய்ச்சல் மற்றும் மூளை அலர்ஜி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும். சந்தேகிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து கண்டறியலாம்.

சிகிச்சை: நிபா வைரஸ் நோய் தாக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.

நோய் பரவாமல் தடுக்கும் முறை: இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமை அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு முறைகளான முக கவசம் அணிதல், முறையாக கை கழுவுதல், நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்தி தொற்று நீக்கம் செய்தல் போன்றவற்றை கையாள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.

வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பன்றிகளை குடியிருப்பு பகுதிகளிலிருந்து அகற்ற வேண்டும். நோய்வாய்ப்பட்ட பன்றிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அல்லது அரசு மருத்துவமனையின் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்’ இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.