நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம்: பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல்

புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணி நாட்கள் மற்றும் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு, வங்கி. இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

பெரும்பாலான மாநிலங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிலாளர் களிடையே அமோக ஆதரவு காணப்பட்டது. இதனால், பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, காப்பீடு, அஞ்சல் அலுவலக சேவைகளில் இடையூறு ஏற்பட்டது. நிலக்கரி, சுரங்கம் மற்றும் தொழில் துறை சார்ந்த உற்பத்திப் பணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

தண்டவாளங்களில் அமர்ந்து மறியல்: பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மாணவர் பிரிவு உறுப்பினர்கள் ஜெகனாபாத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்குவரத்து சேவையில் தடங்கல் ஏற்பட்டது. இதேபோல, மேற்கு வங்கத்திலும் ஜாதவ்பூர் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் மறியல் நடைபெற்றது. இடதுசாரி தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் காவல் துறையின் தடுப்புகளையும் மீறி தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து சேவை கடும் பாதிப்புக்கு உள்ளானது.

டார்ஜிலிங் மலைப் பகுதிகளை தவிர்த்து, இதர இடங்களில் போக்குவரத்துக் கழக (என்பிஎஸ்டிசி) பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கினர்.

கேரளாவில் கடைகள் அடைப்பு: கேரளத்தில் தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று நேற்று கோட்டயத்தில் கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து நடத்திய போராட்டத்தில் பல மணி நேரத்துக்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

சிஐடியு சங்க பொதுச் செயலாளர் தபன் குமார் சென் கூறும்போது, “தொழிலாளர் உரிமைகளை மறந்து, பெருநிறுவன சார்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இறுதியில் ஜனநாயக கட்டமைப்பை தகர்ப்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கு எதிராகவே நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்க இயக்கத்தை அழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்” என்றார்.

இந்த போராட்டத்தில் ஐஎன்டியுசி, ஏஐடியுசி, இந்து மஸ்தூர் சபா, சிஐடியு, எபிஎஃப் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

தமிழகத்தில் போக்குவரத்து பாதிப்பில்லை: மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது – நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் போக்குவரத்து, அரசு சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் நிலையம் அருகே 13 தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்து கோஷமெழுப்பினர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரையும் போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். மறியல் போராட்டத்தால் அண்ணா சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்க பாதிக்கப்பட்டது.

கிண்டி அஞ்சல் நிலையம், திருவொற்றியூர் சுங்கச்சாவடி மற்றும் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

வேலைநிறுத்தம் காரணமாக எல்ஐசி, பொதுக்காப்பீடு, வங்கி, வருமான வரி, அஞ்சல் நிலையங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே வந்தனர். வருமான வரித் துறையில் 100 சதவீதம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னையில் உள்ள வருமானவரி அலுவலகம் மூடப்பட்டது.

வங்கி-காப்பீட்டு ஊழியர்கள் அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும், அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் பாஜக ஆதரவு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. சென்னையில் 6 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 2,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும், இந்த போராட்டத்தால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. தொழிற்சங்கங்களின் ஆட்டோக்கள் தவிர இதர வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டன. மின்சார ரயில்களும் வழக்கம்போல இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

அனைத்து கடைகளும் திறந்திருந்தன. சென்னை தலைமைச் செயலகம் உட்பட அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிக்கு சென்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.