மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடரில் ஆட இருந்தது. இந்த தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரை திட்டமிட்ட படி நடத்த முடியாது என பி.சி.சி.ஐ., வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடர் ரத்தானதை அடுத்து அதே கால கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எதிராக தங்கள் நாட்டில் அதே தலா 3 போட்டிகள் டி20 மற்றும் ஒருநாள் (வெள்ளைப்பந்து) தொடர்களை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ.-யிடமும் இலங்கை வாரியம் பேச்சுவார்த்தைக்கு அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட இந்த தொடர் நடைபெறுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடர் நடக்கும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும். இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விடைபெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். கடந்த ஐ.பி.எல். தொடருக்கு பின் அவர்கள் இருவரையும் களத்தில் காண முடியவில்லை. வங்காளதேச ஒருநாள் தொடர் ரத்தானதால் அவர்கள் இருவரையும் மீண்டும் களத்தில் காணும் நாள் தள்ளி சென்றது. இதன் காரணமாக ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தற்போது இந்த செய்தி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.