Flower Tea: பூக்களில் தேநீர்; எதில் என்ன மருத்துவப்பலன்? – சொல்கிறார் சித்த மருத்துவர்!

பூக்களில் தேநீர் போடுவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பூக்கள் டீ பேக் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது. என்னென்ன பூக்களை பயன்படுத்தலாம்; எப்படி பயன்படுத்த வேண்டும்; அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பனப் பற்றி திருவள்ளூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். சுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம்.

”சித்த மருத்துவத்தில் பலவிதமான பூக்களை பயன்படுத்தி கஷாயமாகத் தயாரித்து பருகி வந்துள்ளனர். அதை இன்று ஃபிளவர் டீயாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பூவுக்கும் தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை.

செம்பருத்தி

Flower Tea
Flower Tea

துவர்ப்பு சுவையுடைய செம்பருத்தி வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை உடையது.  உடல் சூட்டை தணிக்கும். செம்பருத்திப் பூவை பயன்படுத்தி தொடர்ந்து தேநீர் வைத்து குடித்துவர பித்ததினால் ஏற்படும் உடல் உபாதைகள் குறையும். உஷ்ணத்தினால் ஏற்படும் முகப்பருக்கள், வியர்க்குரு போன்றவற்றையும் குறைக்கும் தன்மையுடையது செம்பருத்தி தேநீர்.

 செம்பருத்திப் பூவில் உள்ள கிளைக்கோஸைடுகள் இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில், செம்பருத்திப்பூ சாறுடன், எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து டானிக்காக கிடைக்கிறது. செம்பருத்திப்பூ இதழுடன் எலுமிச்சை தோல் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து ஹெர்பல் டீயாகவும் குடித்து வர இதய ஆரோக்கியம் மேம்படும். இதை சித்த மருத்துவத்தில் ‘செம்பருத்திப்பூ சர்பத்’ என்பார்கள்.

ஆவாரம் பூ

ஆவாரம் பூ
ஆவாரை பூ

‘ஆவாரம் பூ பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ’ என்ற பழமொழிக்கேற்ப இச்செடியில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நோய்களுக்கு அருமருந்து ஆகிறது. குறிப்பாக, துவர்ப்பு சுவையுடைய ஆவாரம் பூ தேநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிப்பது முழுமையான புத்துணர்ச்சியைத் தரும். சித்த மருத்துவத்தில் அகத்தியர் குணவாகடத்தில் இந்தப்பூ நீரிழிவு பிரச்னையில் எந்தளவுக்கு பலன் அளிக்கும் என்பது பற்றி பேசியிருக்கிறார். இந்த தேநீர், உடலில் வரக்கூடிய கற்றாழை நாற்றம் என்று சொல்லக்கூடிய ஒருவகையான துர்நாற்ற பிரச்னையை சரி செய்யக்கூடிய தனித்துவமான தன்மையை கொண்டது.

தாமரை

flower tea
flower tea

சித்த மருத்துவத்தில் கஷாயமாக பயன்படுத்தப்படுகிறது. இதை தேநீராகவும் குடிக்கலாம். தாமரை இதழ், தாமரை மகரந்தப்பொடி இரண்டும் சேர்த்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். அதிக உடல் சூடு, பித்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் வெண்தாமரை இதழில் தேநீர் வைத்து பருகி வர குணமாகும்.

மல்லிகை

flower tea
flower tea

இதில் உள்ள நறுமணம் நம் மூளைக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இலையை காய வைக்கும்போது அதனுடன் மல்லிகையும் சேர்த்து காயவைத்து பயன்படுத்துகின்றனர். சீனாவில் கிரீன் டீ தயாரிப்பில் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.

ரோஜா

flower tea
flower tea

ரோஜாவின் இதழில் உள்ள நிறமிகள் தேநீருக்கு சிறந்த நிறத்தை தருவதுடன் நம் மூளைக்கு ஏற்பிகளாக செயல்பட்டு மன அழுத்தத்தை குறைக்கின்றன. காய வைத்த இதழ்களுடன், சீரகம், சோம்பு மற்றும் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக பருகி வர, பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களும் தூக்கமின்மை பிரச்னையும் தீரும்.

குங்குமப்பூ

flower tea
flower tea

குங்குமப்பூ தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சரும பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், பதற்றம், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்கின்றன. கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ தேநீர் தொடர்ந்து குடித்து வருவது ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும்.

இலுப்பைப் பூ

சித்த மருத்துவர் சுப்பிரமணி
சித்த மருத்துவர் சுப்பிரமணி

‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாக இலுப்பைப் பூவை பயன்படுத்தி உள்ளனர். உடல் மெலிந்தவர்கள் பாலுடன் இலுப்பைப் பூவை சேர்த்து தேநீர் வைத்து அருந்தி வர உடல் தேறும். மாதவிடாய் பிரச்னைகள், ஆண்மை குறைபாடு பிரச்னைகள் நீங்கும்.

நுணா பூ

நுணா
நுணா

நுணா பூ பயன்படுத்தி தேநீர் வைத்து குடிப்பது உடல் வெப்பத்தை தணித்து வீக்கத்தைக் குறைக்கவும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளை நீக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், மாதவிடாய் காலத்தை சீர் செய்யவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவும்.

இலவங்கப் பூ

இலவங்கம்
இலவங்கம்

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இலவங்கப் பூ தேநீர் உள்ளது. பூவுடன், சீரகம், தேன் சேர்த்து தேநீராக பருகி வர பசியின்மை, வயிற்று எரிச்சல் பிரச்னைகள் சரியாகும். சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து இந்தப் பூ.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.