லண்டன்,
இந்தியா – இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.
இன்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ஜோ ரூட் 103 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் விக்கெட்டை பும்ரா வீழ்த்துவது இது 11-வது முறையாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற கம்மின்சின் (11 முறை) சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் மற்றும் பிரைடன் கார்ஸ் கைகோர்த்து இங்கிலாந்து அணியை காப்பாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்து வருகின்றனர். ஜேமி சுமித் 51 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 105 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் அடித்துள்ளது. தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.