இங்கிலாந்தின் மிரட்டலடி வீரர்… ஜேமி ஸ்மித் ஐபிஎல் மினி ஏலத்தில் இருக்கிறாரா?

Cricket News In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England) இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 10) புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

IND vs ENG: ரூட் சதம்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் (ஜூலை 10) ஆட்ட நேர முடிவில் 251 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து, ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் இரண்டாம் நாள் (ஜூலை 11) ஆட்டத்தை தொடர்ந்தனர். ரூட் சதத்தை கடந்தாலும் பும்ரா விரைவாக அடுத்தடுத்து மொத்தம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை அசரடித்தார்.

IND vs ENG: அசத்திய ஸ்மித் – கார்ஸ் 

ஸ்டோக்ஸ் 44, ரூட் 104, வோக்ஸ் டக்அவுட்டாக இந்தியா விரைவாக இங்கிலாந்தின் இன்னிங்ஸை முடித்துவிடும் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால், 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜேமி ஸ்மித் – பிரைடன் கார்ஸ் ஜோடி இந்தியாவின் பந்துவீச்சை திணறடித்தது. இந்த ஜோடி 84 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்மித் 51 ரன்களுக்கும், கார்ஸ் 56 ரன்களும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 387 ரன்களுககு ஆட்டமிழந்தது.

Stu Forster pic.twitter.com/j5noHaH0kw

— England Cricket (@englandcricket) July 11, 2025

Jasprit Bumrah: லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் பும்ரா

இந்தியாவை பந்துவீச்சை பொருத்தவரை பும்ரா 5 விக்கெட், சிராஜ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட் மற்றும் ஜடேஜா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.  5 விக்கெட்டை கைப்பற்றியதை தொடர்ந்து பும்ராவின் பெயரும் புகழ்பெற்ற லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் சேர்க்கப்பட்டது. கடந்த போட்டியில் 10 விக்கெட்டை வீழ்த்தி கவனம் ஈர்த்த ஆகாஷ் தீப் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது செஷனில் பேட்டிங்கை தொடங்கியது.

Jofra Archer: ஆர்ச்சர் மிரட்டல்

வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு ஜெய்ஸ்வால் மிரட்டினார். ஆனால், 2வது ஓவரின் 3வது பந்தில் ஆர்ச்சர் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை கைப்பற்றினர் மாயாஜாலம் காட்டினார். 2021ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு, சுமார் 4 ஆண்டுகள் கழித்து ஆர்ச்சர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நிலையில் வீசிய 3வது பந்திலேயே முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது மெய் சிலிர்க்க வைத்தது.

Karun Nair: கருண் நாயர் தலைக்கு மேல் கத்தி

அதற்கு பிறகு, இரு கர்நாடக சிங்கங்கள் ஜோடி சேர்ந்தன. கேஎல் ராகுல் – கருண் நாயர் ஜோடி மிக நிதானமாக ரன்களை சேர்த்தது. இருப்பினும் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஜோ ரூட்டின் அற்புதமான கேட்சில் கருண் நாயர் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2016இல் சென்னையில் 303 ரன்களை அடித்த பிறகு, கருண் நாயரின் 2வது அதிகபட்ச ரன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் கருண் நாயரின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. 

IND vs ENG: இந்தியா 242 ரன்கள் பின்னிலை

கில் 16 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 145 ரன்களை எடுத்து 3 விக்கெட்டை இழந்துள்ளது. கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி 242 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் 3 நாள் ஆட்டம் மீதம் இருக்கிறது.

Jamie Smith: டெஸ்டில் அதிரடி காட்டும் ஜேமி ஸ்மித்

இவை ஒருபுறம் இருக்க இங்கிலாந்தை பொருத்தவரை ஜேமி ஸ்மித் முரட்டு பார்மில் இருக்கிறார். 40, 44*, 184*, 88, 51 ரன்கள் என இந்த தொடரில் விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் 407 ரன்களை குவித்திருக்கிறார். தொடர்ச்சியாக 5 இன்னிங்ஸ்களிலும் 40 ரன்களை கடந்திருக்கிறார். ஜேமி ஸ்மித்தின் சராசரி 135.66, ஸ்ட்ரைக் ரேட் 86.78 ஆக உள்ளது. டெஸ்ட் போட்டியில் நம்பர் 7இல் விளையாடும் வீரர் டி20 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனலாம்.

Vital runs from Jamie Smith before the lunch break @IGCom pic.twitter.com/M1aMBeVanw

— England Cricket (@englandcricket) July 11, 2025

Jamie Smith IPL: ஜேமி ஸ்மித் ஐபிஎல் விளையாட முடியாது  

அப்படியிருக்க, இப்போது பல ரசிகர்கள் ஜேமி ஸ்மித் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் உள்ளார் அல்லது இந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஜேமி ஸ்மித் இன்னும் 2 சீசன்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. அது ஏன் என்பதை இங்கு காணலாம். 

ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு மெகா ஏலத்தை முன்னிட்டு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. அதாவது, வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் மினி ஏலத்தில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. பல வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும் காரணத்தால் மெகா ஏலத்தை புறக்கணித்துவிட்டு, மினி ஏலத்திற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததால் அதை தடுக்க ஐபிஎல் நிர்வாகம் இந்த முடிவை எடுத்தது. 

அந்த வகையில், துரதிருஷ்டவசமாக ஜேமி ஸ்மித் கடந்த மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும் மினி ஏலத்தில் பங்கேற்க இயலாது. தற்போதைய விதிப்படி அவர் 2028 மெகா ஏலத்தில்தான் பதிவு செய்ய இயலும். அவருக்கு வயது தற்போது 25 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.