லண்டன்,
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட பண்ட் – ராகுல் ஜோடி பொறுமையாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய பண்ட் தனது ஸ்டைலில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் அவுட்டானார்.
இந்த இன்னிங்சில் ரிஷப் பண்ட் 2 சிக்சர்கள் அடித்தார். இதனையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அவர் அடித்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சின் (34 சிக்சர்கள்) மாபெரும் சாதனையை தகர்த்துள்ள ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட் – 36 சிக்சர்கள்
2. விவியன் ரிச்சர்ட்ஸ் – 34 சிக்சர்கள்
3. டிம் சவுதி – 30 சிக்சர்கள்
4. ஜெய்ஸ்வால் – 27 சிக்சர்கள்
5. சுப்மன் கில் – 26 சிக்சர்கள்