‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்நிலையில், சட்டத்துறை மற்றும் அரசமைப்பு சார்ந்து உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என சொல்லி அவரை வாழ்த்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மாநிலங்களவையில் நேரடியாக 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அப்படி நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிதாக நான்கு பேரை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது நியமித்துள்ளார்.

கலை, அறிவியல், சட்டம், விளையாட்டு, இலக்கியம், சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு குடியரசுத் தலைவர் நேரடியாக அவர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிப்பார். அந்த வகையில் இப்போது சட்டத்துறையில் சிறப்பான செயல்பாட்டை வழங்கிய உஜ்வால் நிகாமை நியமன மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“சட்டத்துறை மற்றும் அரசமைப்பு மீதான உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பும், பற்றும் போற்றத்தக்கது. அவர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் முக்கிய வழக்குகளில் நீதி கிடைப்பதில் பிரதான பங்காற்றியுள்ளார். வழக்கறிஞராக அரசியலமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், மக்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் பாடுபட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் அவரை நியமித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அவரது நாடாளுமன்ற இன்னிங்ஸிற்கு எனது வாழ்த்துகள்” என எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

யார் இந்த உஜ்வால் நிகாம்? – மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் உஜ்வால் நிகாம். 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் உஜ்வால் நிகாம் ஆஜராகியுள்ளார். இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குகளில் அவர் பணியாற்றி உள்ளார். கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 4.29 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

அவருடன் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, கேரளாவை சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

இளையராஜா, சுதா மூர்த்தி, விஜயேந்திர பிரசாத், பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, சத்னம் சிங் சாந்து, குலாம் அலி காட்டனா ஆகியோரை ஏற்கனவே குடியரசுத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நேரடியாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.