ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற காரைக்கால் நைட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் நெயன் காங்கேயன் (2), லோகேஷ் பிரபாகரன் (9), என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், ஆகாஷ் கார்கவே மற்றும் ஆனந்த் பயஸ் இணை அபாரமாக விளையாடியது.
இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தனர். அருமையாக ஆடிய ஆகாஷ் கார்கவே 57 (44 பந்துகள், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனந்த் பயஸ் 66 (44 பந்துகள், 1 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) ரன்களுடனும், நதீம் கான் 39 (15 பந்துகள், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) ரன்களுடனும் கடைசிவரை களத்தில் இருந்தனர்.
பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்கால் நைட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிதேஷ் செதாய் மற்றும் முஹமது அக்கிப் ஜவாத் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரியளவில் ரன்கள் குவிக்கவில்லை. மேலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
20 ஓவர்கள் முடிவில் காரைக்கால் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிப்பட்சமாக முஹமது அக்கிப் ஜவாத் 50 (35 பந்துகள், 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) ரன்களும், ஹிதேஷ் பட்டேல் 32 (18 பந்துகள், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) ரன்களும் எடுத்தனர். ஒயிட் டவுன் அணி தரப்பில் நமன் சர்மா மற்றும் அடில் அயூப் தண்டா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக நமன் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ரூபி ஒயிட் டவுன் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் காரைக்கால் அணிக்கு இது 4ஆவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய நமன் சர்மா, “நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததாகவே உணர்ந்தோம். ஆனால், டெத் ஓவர்களில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பான வீசினர். இடையில் சில போட்டிகள் வெற்றியை தவறவிட்டோம். தற்போது 4 போட்டிகளில் வென்றுள்ளோம். இதேபோல் கடைசி வரை ஆடி, கோப்பையை வெல்ல வேண்டும். பாண்டிச்சேரி பிரிமியர் லீக் இளைஞர்களுக்கு அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. ஐபிஎல் போன்று இதில் விளையாடும் வீரர்களுக்கும் நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றது” என்றார்.
மேலும் படிங்க: 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: போட்டிகள் எங்கே, எப்போது?
மேலும் படிங்க: இந்த வீரருக்கு பதிலாக இவரை இறக்குங்க.. ரவி சாஸ்திரி!