மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றிருக்கும். தற்போதைய சூழலில் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை கைப்பற்ற முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியால் இப்போதும் இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல முடியும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “ஆமாம். இது ஒரு நல்ல அணி. இந்தியா வலுவான பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளது. மான்செஸ்டரில் பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயமாக அதிக உதவி கிடைக்கும். இது எங்கள் பந்துவீச்சு தாக்குதலை மிகவும் சோதிக்கும். மான்செஸ்டர் பேட்டர்களுக்கும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பந்து பேட்டிற்கு வருவதை விரும்புகிறார்கள். ஒட்டுமொத்தமாக, பந்து நன்றாக வரும் ஒரு பிட்சாக இது இருக்கும்.
எனவே மான்செஸ்டரில், இந்தியா தொடரை சமன் செய்ய மிக நல்ல வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. இங்கிலாந்துக்கு இங்கேயும் (லார்ட்ஸ்) லீட்ஸிலும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. இந்திய அணி மான்செஸ்டர் மற்றும் ஓவலில் (5-வது போட்டி) கொஞ்சம் அதிர்ஷ்டம் பெற்றால் தொடரை 3-2 என வெல்ல முடியும்” என்று கூறினார்.