வாஷிங்டன்,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. 39 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவருடன் மேலும் 3 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை நாசாவுடன் இணைந்து நடத்த முடிவு செய்தது. இந்த திட்டத்தில் நாசாவுடன், இஸ்ரோவும் கைகோர்த்தது.இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லாவை, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்தது.
இதையடுத்து ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வுப்பணிக்காக இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் தேர்வானார்கள்.
இந்த விண்வெளி ஆய்வுக்குழுவினர், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் இணைக்கப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர்.
பால்கன்-9 ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் புவிவட்டபாதையை அடைந்தது. அதில் இருந்து டிராகன் விண்கலம் தனியாக பிரிந்து, சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணித்து. சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பின்னர், 26-ந்தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை டிராகன் விண்கலம் அடைந்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன், டிராகன் விண்கலம் இணைக்கப்பட்டதும், அதில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அங்கு அவர்களை ஏற்கனவே இருந்த வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சுபான்ஷு சுக்லா மட்டும் 7 ஆய்வுகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 18 நாட்கள் தங்கியிருந்தனர்.
தங்களது பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4.40 மணிக்கு விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் 4 பேரும் புறப்பட்டனர்.
விண்கலம் பூமியை நெருங்கும்போது பாராசூட்டுகள் 2 நிலைகளில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக முதலில் நேற்று பகல் 2.57 மணிக்கு பூமியில் இருந்து சுமார் 5.7 கிலோ மீட்டர் உயரத்தில் பாராசூட்டுகள் விரிந்து விண்கலத்தின் வேகத்தை குறைத்தது. தொடர்ந்து, பூமியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் வந்தபோது, பிரதான பாராசூட்டுகள் விரிந்தது. அது விண்கலத்தின் வேகத்தை முற்றிலுமாக குறைத்தது.
சுமார் 22.5 மணி நேர பயணத்துக்கு பிறகு இந்திய நேரப்படி நேற்று மாலை 3.01 மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் டிராகன் விண்கலம் பத்திரமாக இறங்கியது.
விண்கலம் கடலில் இறங்கியதும், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அமெரிக்கா கடற்படையினர் விண்கலத்தை மீட்டு, அங்கிருந்த மீட்பு கப்பலில் ஏற்றினர். பின்னர் விண்கலத்தின் கதவுகள் மாலை 3.40 மணிக்கு திறக்கப்பட்ட உடன், திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் முதலில் வெளியே வந்தார். அவரை தொடர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு ஆகிய 4 பேரும், கையசைத்தப்படி வெளியே வந்தனர்.
18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 வீரர்களும் இருந்ததால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பதை களைவதற்கு அவர்களுக்கு தசை அழுத்தம், மனோ திட பயிற்சி 7 நாட்கள் அளிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று பூமி திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சமூக வலை தள பதிவில் கூறியுள்ளார்.