இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெளிவுபடுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இருவரும் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த நிலையில், பிசிசிஐ அவர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிங்க: 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: போட்டிகள் எங்கே, எப்போது?
பிசிசிஐயின் தெளிவான அறிவிப்பு
ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். 2024 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஓய்வை அறிவித்தனர். மேலும், இந்த ஆண்டு மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றனர். இதனால், தற்போது அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா, “ரோஹித் மற்றும் விராட் ஒருநாள் கிரிக்கெட்டில் இருப்பார்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவர்களின் சொந்த முடிவு. பிசிசிஐ எந்த வீரரையும் ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
ரோஹித் மற்றும் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் பயணம்
ரோஹித் மற்றும் விராட் 2027 உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்பதே பலரது ஆசையாக உள்ளது. ரோஹித் ஷர்மா 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 54.27 சராசரியுடன் 597 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார். அவரது 126 என்ற ஸ்ட்ரைக் ரேட் பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. அதே போல், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் மற்றும் 50+ சராசரியுடன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். இருவரும் 2027 உலகக் கோப்பைக்கு தயாராகி வருவதாகவும், ஆகஸ்ட் 2025ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் ரோஹித் மற்றும் கோலிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். எப்போது இவர்கள் களத்தில் இருந்தாலும் இவர்களை பார்க்கவே தனி கூட்டம் வரும். ரோஹித் மற்றும் கோலி இல்லாமல் இந்திய அணி முழுமையடையாது. இருப்பினும் 2027 உலகக் கோப்பை வரை அணியில் தொடர்ந்து விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணி இலங்கையுடன் ஆகஸ்ட் மாதம் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
மேலும் படிங்க: இந்த வீரருக்கு பதிலாக இவரை இறக்குங்க.. ரவி சாஸ்திரி!