Comeback விராட் கோலி… 'ஓய்வை வாபஸ் வாங்குங்க' – வலுக்கும் குரல்கள்… காரணம் என்ன?

IND vs ENG, Virat Kohli Retirement: ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

IND vs ENG: எதிர்பார்ப்புடன் தொடங்கிய டெஸ்ட் தொடர் 

அதிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற வலிமையான வேகப்பந்துவீச்சாளர் இல்லாத இங்கிலாந்து அணியும்; விராட் கோலி, புஜாரா, ரோஹித் சர்மா, அஸ்வின், இஷாந்த் சர்மா போன்றோர் இல்லாத இந்திய அணியும் மோத இருப்பதால்தான் எதிர்பார்ப்புகள் இரட்டிப்பாகின. ஐபிஎல் தொடரின்போதே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்ததும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஷாக் ஆனது. 

இந்நிலையில், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, 2வது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

IND vs ENG: ‘விராட் கோலி மீண்டும் வரணும்…’

தொடர்ந்து புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியிலும் இந்திய அணி கடைசி வரை போராடியது. ஆனால் அதிர்ஷ்டக் காற்று இங்கிலாந்து பக்கம் வீச 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்திய அணி அடுத்த வரும் 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற இயலும். 

இந்நிலையில், சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, அவரது ஓய்வை திரும்பப் பெற்று மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற குரல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 193 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றதை தொடர்ந்து, மீண்டும் சேஸ் மாஸ்டர் விராட் கோலி அணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கைகள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. விராட் கோலி தற்போது இங்கிலாந்தில்தான் வசிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

IND vs ENG: ‘திரும்பி வருவதில் எந்த தவறும் இல்லை’

இந்த கருத்தை 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் மதன் லாலும் வலியுறுத்தி உள்ளார்.  CricketPredicta என்ற கிரிக்கெட் சார்ந்த தளத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் பேசியபோது, “இந்திய கிரிக்கெட் மீது விராட் கோலி கொண்டுள்ள காதல் யாருடனும் ஒப்பிடவே முடியாதது. அவர் ஓய்வில் இருந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வர வேண்டும் என்பது எனது விருப்பம். ஓய்வில் இருந்து திரும்பி வருவதில் எந்த தவறும் இல்லை. இந்த (இங்கிலாந்து) தொடரில் வராவிட்டாலும் அடுத்த தொடரிலாவது அவர் மீண்டும் (டெஸ்டில்) விளையாட வர வேணடும்.

Madan Lal said – “Virat Kohli’s passion for Indian cricket was unmatched. It’s my wish that he should come back to Test cricket after retirement. There’s nothing wrong with returning. If not in this series, he should make a comeback in the next.”

“From my point of view, he… pic.twitter.com/fV9zhCBKj2

— Virat Kohli Fan Club (@Trend_VKohli) July 16, 2025

IND vs ENG: ‘தயவு செய்து திரும்பி வாருங்கள்’

என்னைப் பொருத்தவரை, அவர் ஓய்வை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரால் 1-2 ஆண்டுகள் எளிதாக டெஸ்டில் விளையாட முடியும். நீங்கள் உங்களின் அனுபவத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்தியாக வேண்டும். இப்போதுதானே ஓய்வு பெற்றீர்கள், ரொம்ப காலம் ஆகிவிடவில்லை, தயவுசெய்து திரும்பி வந்துவிடுங்கள்” என விராட் கோலிக்கு தனது பலமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.