புதுடெல்லி,
பள்ளி மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ‘சுகர் போர்டுகள்’ எனப்படும் விழிப்புணர்வு பலகைகளை வைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த சுகர் போர்டுகளில் மாணவர்கள் தினந்தோறும் எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போர்டுகளை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கூடும் இடங்களான உணவகம், ஹால் உள்ளிட்ட இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பள்ளிகளில் ‘ஆயில்’ போர்டுகள் வைக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது. எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல் பருமன் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.