Pondicherry Premier League: ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 17) நடைபெற்ற 20வது லீக் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வில்லியனூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் புகுந்த ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. ஆதித்யா கர்வால் 15 ரன்களில் வெளியேறினாலும், வேதாந்த் பரத்வாஜ், பரமேஷ்வரன் இணை 2ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. பின்னர் வேதாந்த் பரத்வாஜ் 42 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து பரமேஷ்வரன் 36 பந்துகளில் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 47 ரன்கள் எடுத்து அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரியளவில் ரன்கள் சேர்க்க தவறினர். வில்லியனூர் அணி தரப்பில் அதிகப்பட்சமாக அமன் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வில்லியனூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மொஹித் காலே (2), ஆகாஷ் போகஜண்டே (5) என அடுத்தடுத்து வெளியேற 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அமன் கான் 23 (12) சிறிது அதிரடி காட்டினார். அதன் பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் பானு ஆனந்த் 37 (30) ரன்களில் வெளியேறினர். பின்னர் வில்லியனூர் அணி தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய பிரித்வி ராஜ் 18ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் 53 (39) அவுட்டானார்.
கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யானம் அணியினர் சிறப்பாக பந்துவீசி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டனர். கட்டுக்கோப்பாக பந்துவீசிய கண்ணன் விக்னேஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 58 ரன்கள் எடுத்த வேதாந்த் பரத்வாஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இது குறித்து கூறிய அவர், “நான் கடைசி வரை களத்தில் நின்று அதிக ரன்கள் அடித்துக் கொடுக்க வேண்டும் என்பது தான் அணியின் திட்டம். ஆடுகளம் பந்துவீசு ஏதுவாக இருந்ததால், 171 ரன்களுக்குள் எதிரணியினரை கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தோம். இதே போன்று தொடர்ந்து விளையாடி அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பது தான் எங்களது அடுத்த திட்டம்” என்றார்.
மேலும் படிங்க: ராசி இல்லாத பும்ரா? இந்திய அணிக்கு அவர் தேவையே இல்லையா – உண்மை என்ன?
மேலும் படிங்க: ’பேம்லி டூரா வந்திருக்கீங்க’ ஜஸ்பிரித் பும்ராவை சுளுக்கெடுத்த சுனில் கவாஸ்கர்