லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் ஊசலாடியது. இதனால் இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறும் அனைவரும் நினைத்தனர். இதையடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன், ஜஸ்பிரித் பும்ரா கூட்டு சேர்ந்தார். பும்ரா முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஒரு மணி நேரத்திற்கு மேலாக இங்கிலாந்து பவுலர்களை சோதித்தார். இருவரும் ஓவருக்கு ஒரு ரன் அல்லது மெய்டன் என்ற ரீதியில் கணக்கு போட்டு ஆடினர். இதனால் இந்தியா கொஞ்சம் சரிவில் இருந்து மீள்வது போல் தெரிந்தது.
ஸ்கோர் 147-ஐ எட்டிய போது பும்ரா (5 ரன், 54 பந்து) ஸ்டோக்ஸ் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஆனாலும் ஜடேஜா களத்தில் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4-வது அரைசதத்தை கடந்தார்.
இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வீசிய பந்தை எதிர்கொண்ட சிராஜ் அதை தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. சிராஜ் 4 ரன்னில் (30 பந்து) போல்டு ஆனார். இப்படி இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில போட்டிகள் வெற்றி தோல்விகளை விட மேலானவை. அவை உங்கள் மன உறுதியையும், குணத்தையும் சோதிக்கின்றன. ஆனால் நாங்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டவைகளை வைத்து இன்னும் வலிமையாக மாறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.