IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2025 தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதியோடு நிறைவடைந்தது. ஆர்சிபி அணி கோப்பையை வென்ற நிலையில், அடுத்த 19வது சீசனுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே தற்போதே எழுந்துவிட்டது எனலாம்.
அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். முதலாவதாக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடத்தப்படும். அதற்கு முன் ஐபிஎல் அணிகள் இடையேயான டிரேடிங் பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த இரண்டும்தான் ரசிகர்களை சுவாரஸ்யத்தில் வைத்திருக்கிறது எனலாம்.
IPL 2026 Mini Auction: ஐபிஎல் தற்காலிக மாற்ற வீரர்கள்
எந்தெந்த நட்சத்திர வீரர்கள் அணி தாவப் போகிறார்கள், ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் குறிவைக்கும், எந்தெந்த வீரர்களுக்கு அதிக தொகயை அணிகள் கொட்டப்போகின்றன, நியூ என்ட்ரி கொடுக்கும் வீரர்கள் யார் போன்ற சுவாரஸ்யங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, கடந்த 2025 ஐபிஎல் தொடர் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக சுமார் 10 நாள்களுக்கு தடைப்பட்டது, இதனால் அட்டவணை மேலும் நீட்டிக்கப்பட்டது.
சில வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், சில வீரர்கள் அணிக்கு திரும்ப முடியாத காரணத்தால் தற்காலிக மாற்று வீரர்களுக்கு (Temporary Replacements) ஐபிஎல் நிர்வாகம் ஒப்புதல் கொடுத்தது. அதாவது, ஏலத்தில் யாரும் எடுக்காத ஒரு வெளிநாட்டு வீரரை மாற்று வீரராக ஒரு அணி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 2026 ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு அவரை கண்டிப்பாக விடுவித்துவிட வேண்டும். இதுதான் அதன் விதி.
IPL 2026 Mini Auction: இந்த 3 வீரர்களுக்கு டிமாண்ட் அதிகம்
அப்படியிருக்க, பலரும் இதுபோல் தற்காலிக மாற்று வீரர்களாக பல்வேறு அணிகளுக்குள் வந்தார். அவர்களில் சிலர் ஓரிரு போட்டிகளில் விளையாடினாலும் பலரின் கவனத்தையும் கவர்ந்தனர். இதனால் வரும் 2026 மினி ஏலத்தில் அதிக தொகைக்கு போக வாய்ப்புள்ள 3 தற்காலிக மாற்று வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: கைல் ஜேமீசன்
நியூசிலாந்து வீரரான இவர், தனது சக நாட்டு வீரரான லாக்கி பெர்குசனுக்கு மாற்று வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இவரை மெகா ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. மாற்று வீரராக இறுதிப்போட்டி உள்பட 4 போட்டிகளிலும் விளையாடிய கைல் ஜேமீசன் (Kyle Jamieson) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரியளவில் உதவிகரமாக இருந்தார்.
சர்வதேச அளவிலும் சரி, டி20 லீக் தொடர்களிலும் சரி அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், மேலும் நன்கு உயரமான வேகப்பந்துவீச்சாளர் என்பதால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை தேடும் லக்னோ சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இவருக்கு மினி ஏலத்தில் அதிக தொகைக்கு செல்லும்.
IPL 2026 Mini Auction: முஸ்தபிசுர் ரஹ்மான்
2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இவரை அந்த அணியின் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். 2024இல் சிஎஸ்கே பிளே ஆப் செல்லாவிட்டாலும் கூட அந்த அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக வீசியிருந்தார் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman). சிஎஸ்கே அணி கலீல் அகமதை எடுத்த பின் இவரை 2025 மெகா ஏலத்தில் எடுக்கவில்லை. மற்ற அணிகளும் இவரை கண்டுக்கவில்லை.
அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வராத காரணத்தால் இவரை எடுத்துக்கொண்ட டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாட வைத்தது. அதில் 4 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இருப்பினும் வரும் மினி ஏலத்தை முன்னிட்டு டெல்லி இவரை விடுவிக்கும். அப்படியிருக்க இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை தேடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இவருக்கு அதிக தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கும்.
IPL 2026 Mini Auction: ஜானி பேர்ஸ்டோவ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓப்பனிங்கில் சூப்பராக செட் ஆகியிருந்த ரியான் ரிக்கில்டன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் பொருட்டு பிளே ஆப் தொடரில் விளையாட முடியாமல் வெளியேறினார். அப்போது ஜானி பேர்ஸ்டோவை (Jonny Bairstow) மும்பை அணி தற்காலிக மாற்று வீரராக கொண்டு வந்தது. 2 போட்டிகளில் 85 ரன்களை அடித்து அவர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மும்பை அந்த சீசனில் குவாலிஃபயர் 2 போட்டியை தாண்டவில்லை.
பேர்ஸ்டோவ் கடந்த காலத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாகவே விளையாடியிருந்தாலும் சில காரணங்களால் அவர் 2025 மெகா ஏலத்தில் யாராலும் எடுக்கப்படவில்லை. ஆனால் அவரின் சர்ஃபிரைஸ் என்ட்ரி பலரையும் அவரை நோக்கி ஈர்த்துள்ளது. குறிப்பாக, நல்ல வெளிநாட்டு ஓப்பனிங் பேட்டரை தேடும் சிஎஸ்கே, டெல்லி அணிகள் இவருக்கு கோடி கோடியாக பணத்தை கொட்டவும் தயாராக இருக்கும்.