வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு 79 வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை பைனலின் போது, டிரம்ப்பின் வீங்கிய கால்கள் பத்திரிக்கையாளர்களால் போட்டோ எடுக்கப்பட்டது. அதேபோல், வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, அவரது கையில் காயங்கள் இருப்பது போன்ற போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரது உடல்நலம் குறித்து விவாதம் எழுந்தது
இந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லீவிட் கூறியதாவது;
ஜனாதிபதி டிரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு க்ரானிக் வெனோஸ் இன்சப்பிசியன்ஸ்’ (நாள்பட்ட சிரை பற்றாக்குறை) எனப்படும் நரம்பு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய் உலகில் 20ல் ஒருவரை பாதிக்கும். கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்தப் பிரச்சினை ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அடிக்கடி கைகுலுக்குதலால் ஏற்பட்ட திசு சேதம் மற்றும் இதய நோய்தடுப்பு மருந்தான ஆஸ்பிரின் மருந்து பயன்பாடு இதற்கு காரணம்.
கால்களில் உள்ள நரம்புகளுக்கு ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு செலுத்துவதில் சிரமம் ஏற்படும்போது இந்த நிலை உருவாகிறது. மற்றபடி, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த நோய் கண்டறியப்பட்டாலும் டிரம்ப்புக்கு எந்த விதமான வலி அல்லது அசவுகரியம் ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.